Published : 22 Apr 2020 09:40 AM
Last Updated : 22 Apr 2020 09:40 AM
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக கைதானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது. கைதானவர்களிடம் இருந்து 50 கார்கள், 70 ஆட்டோக்கள், 3,634 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 3,754 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா வைரஸால் இதுவரை 1,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தில் விதிகளில் எந்த தளர்வும் இல்லாமல், மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஊரடங்கை மீறி சாலைகளில் தேவையில்லாமல் நடந்தோ, இருசக்கர வாகனங்களிலோ சுற்றித்திரிபவர்களைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாகனங்களை பறிமுதல் செய்யும்படி போலீஸாருக்கு எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் நேற்று (ஏப்.21) வரை 27 நாட்களில் 4,853 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 4,943 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதான இவர்களிடம் இருந்து 50 கார்கள், 70 ஆட்டோக்கள், 3,634 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 3,754 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT