Published : 22 Apr 2020 07:53 AM
Last Updated : 22 Apr 2020 07:53 AM
‘கரோனா’ வைரஸ் பரவும் இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, வைட்டமின் ‘சி’ நிரம்பிய நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளை பற்றி விளக்குகிறார்கள் மதுரை வேளாண்மை கல்லூரி வேளாண் அறிவியல் மைய பேராசிரியர் செல்வி ரமேஷ், பேராசிரியர் ஆரோக்கியமேரி.
நெல்லிக்காயில் இருந்து ஜூஸ் மற்றும் ஸ்குவாஷ் தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கலாம்.
700 கிராம் நெல்லிக்காய் கூழ், 200 மில்லி எலுமிச்சைச் சாறு, 50 மில்லி இஞ்சிச்சாறு, 1 கிலோ சீனி, 5 கிராம் சிட்ரிக் அமிலம், 2 லிட்டர் தண்ணீர் கொண்டு நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்கலாம்.
இதற்கு நெல்லிக்காயை கழுவி விதை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்து கூழாக்க வேண்டும். இஞ்சிச்சாறு, எலுமிச்சை சாறை இதனுடன் கலக்க வேண்டும். தண்ணீரில் சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் / எலுமிச்சை சாறு பாகு தயாரித்து பின்னர் வடிகட்ட வேண்டும். நெல்லி கூழையும், சர்க்கரைக் கரைசலையும் கலந்து அடுப்பில் வைத்து 80 சென்டிகிரேடு வரை அல்லது ரசம் பொங்கி வருவது போன்ற நிலை வரை கொதிக்க விட வேண்டும். பின்னர், கிருமி நீக்கம் செய்யப்பட்ட குப்பிகளில் ஊற்றி சோடா குப்பி மூடி கொண்டு மூட வேண்டும்.
நெல்லி ஸ்குவாஷ் தயாரிக்க ஒரு கிலோ நெல்லிக்காய் கூழ், 2 கிலோ சர்க்கரை, 1 லிட்டர் தண்ணீர், 1 தேக்கரண்டி சிட்ரிக் அமிலம் / எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காயை 2 சதவீதம் உப்புக் கலந்த நீரில் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நெல்லிக்காயைக் கழுவிவிட்டு இட்லி வேக வைப்பது போல் 2 நிமிடம் வேக வைத்து கொட்டையை நீக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் அரைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர், சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம், எலுமிச்சை சாறு எடுத்துக் கொண்டு சர்க்கரை நன்கு கரையும் வரை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி சர்க்கரைப் பாகு தயார் செய்ய வேண்டும்.
சர்க்கரைப் பாகை வெள்ளைத் துணியில் வடிகட்டி நன்றாக ஆற வைக்க வேண்டும். இந்த பாகுடன் பழக் கூழை கலந்து வடிகட்டவும். பின்னர், பாட்டிலில் ஒரு அங்குலம் இடைவெளி இருக்கும்படி நிரப்பிக் கொள்ளலாம். பரிமாறுவதற்கு முன் ஒரு பங்கு ஸ்குவாஷ், 3 பங்கு நீர் சேர்த்து பரிமாற வேண்டும்.
அதுபோல் நெல்லி ஜாம் தயாரிக்க நெல்லிக்காய் கூழ் 1 கிலோ, 1 கிலோ சர்க்கரை 1 கிலோ சிட்ரிக் அமிலம்/எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காயை கழுவி சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் கூழாக்க வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் சர்க்கரை, சிட்ரிக் அமிலத்தை சேர்த்து கிளறிக் கொண்டே சூடுபடுத்த வேண்டும். இப்பழக்கூழ் கரண்டியில் இருந்து கீழே விழும்போது தகடுகளாக விழும். இந்தப் பதம் வந்தவுடன் இறக்கி விடலாம். அகலமான பா த்திரத்தில் தண்ணீர் பாதி அளவு எடுத்துக் கொண்டு அதில் பழச்சாறு நிரப்பி மூடப்பட்ட குப்பிகளை அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும்.
கொதிநீரில் குப்பிகளை 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பானத் தை அப்படியே பருகலாம். இதுபோல் நெல்லி சுபாரி, தேன் நெல்லி தயாரித்தும் சாப்பிடலாம் என்று தெரிவித்தனர். ஒய். ஆண்டனி செல்வராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT