Published : 22 Apr 2020 07:39 AM
Last Updated : 22 Apr 2020 07:39 AM
எங்கள் குடும்பத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை. உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் குடும்பத்தில் 3 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு வைரஸ் தொற்று இல்லை. ஆனாலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்திருந்தார். இது தவறான தகவல் என்று பொள்ளாச்சி தொகுதி எம்.பி. கே.சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மார்ச் 22-ம் தேதி டெல்லியில் இருந்து கோவை வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சிலருக்கு நோய்த் தொற்று இருப்பதாக பரிசோதனையில் மார்ச் 30-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தியை சார் ஆட்சியர் மூலம் அறிந்த நான், 30-ம் தேதியே பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த மாதிரியை வழங்கினேன்.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு, 31-ம் தேதி நோய்த் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 15 நாட்கள் பெருமாள்புதூர் கிராமத்தில் உள்ள வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.
எனவே, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியது போல, கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் யாரும் டெல்லியில் என்னுடன் தங்கவில்லை. என்னுடைய குடும்ப நபர்கள் யாருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். உண்மைக்கு புறம்பான தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்ததற்காக அமைச்சர் மறுப்பு அறிக்கை வெளியிடவேண்டும். இவ்வாறு கே.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரிடம் கருத்து கேட்பு
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து கேட்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கரை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும், அவர் அழைப்பை எடுக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT