Published : 22 Apr 2020 06:39 AM
Last Updated : 22 Apr 2020 06:39 AM
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை உலக அளவில் பிரபலம். ஆனால், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் கூட வென்டிலேட்டர்கள் போதுமான அளவில் இல்லை. அதனால் சிகிச்சை கொடுப்பது சவாலாக உள்ளது. இந்தச் சூழலில் வென்டிலேட்டர் எல்லோருக்கும் பலன் தராது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் நியூயார்க் மருத்துவர் ‘கேமரூன் கைல் சிடல்’ (Dr Cameron Kyle-Sidell). இவர் ஓர் அவசரப் பிரிவு தலைமை மருத்துவர்.
‘‘சார்ஸ் கரோனா வைரஸ் நோய்க்கு உலகமெங்கும் தவறான சிகிச்சை கொடுப்பதாக உணர்கிறேன். இந்த நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் பயன்படுத்துகிறோம். நியூயார்க்கில் மட்டும் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டவர்களில் 80% பேர் இறந்துவிட்டனர். சீனாவில் இதேபோல் 86% பேரும், இங்கிலாந்தில் 66% பேரும் இறந்திருக்கின்றனர். காரணம், நோயின் ஆரம்பத்திலேயே நோயாளிகளுக்கு வென்டிலேட்டரை பொருத்திவிடுவதுதான். இது இவர்களுக்கு நன்மை செய்வதைவிட தீமைகள் செய்வதே அதிகம். இந்த மருத்துவ நெறிமுறையை (Protocol) மாற்ற வேண்டும்’’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார் கேமரூன்.
இதை சாதாரணமாக கடந்து போக முடியவில்லை. இதன் பின்னணியில் உள்ள பிரச்சினை என்ன? அதைத் தெரிந்துகொள்ள வென்டிலேட்டர் குறித்த புரிதல் வேண்டும்.
வென்டிலேட்டர் என்பது என்ன?
சுயமாக சுவாசிக்க முடியாதவர்களுக்கு செயற்கையாக சுவாசிக்க உதவும் கருவிதான் வென்டிலேட்டர். இது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) இருக்கும். மருந்து, மாத்திரை போல் நேரடியாக நோயைக் கட்டுப்படுத்தும் சிகிச்சை பொருள் அல்ல. சிகிச்சைக்கு உதவும் ஒரு துணைக் கருவி மட்டுமே. ‘உயிர் காக்கும் கருவி’ என்று பெயர் பெற்றது.
இது பார்ப்பதற்கு ஏர்கூலர் போல் இருக்கும். இதில் இரண்டு நீண்ட குழாய்கள் உண்டு. ஒன்று, ஆக்ஸிஜனை உட்செலுத்தும். மற்றொன்று கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும். ஆக்ஸிஜன் குழாய் ஈரமூட்டியோடு (Humidifier) இணைக்கப்பட்டிருக்கும். ஆக்ஸிஜனை குளிர்ச்சியூட்ட இந்த ஏற்பாடு.
அடுத்தது, உள்மூச்சுக் குழல் (Endotracheal tube). இது முக்கால் அடி பிறை வடிவ ஊதுகுழல்.இதை மூக்கு, வாய், தொண்டை இப்படி ஏதாவது ஒன்றின் வழியாக மூச்சுக் குழாய்க்குள் (Trachea)செலுத்த வேண்டும். அதற்கு முன்னால் பயனாளிக்கு உறக்க மருந்தும் மூச்சுத் தசைகளைத் தளர்த்தும் மருந்துகளும் கொடுக்கப்படும்.
பிறகு குரல்வளைநோக்கி (Laryngoscope) உதவியுடன், ஒளியைப் பாய்ச்சி, குரல்வளையைத் தாண்டி, மூச்சுக் குழாயில் உள்மூச்சுக் குழலைப் பொருத்துகின்றனர். அது நகராமல் இருக்க, கார்சக்கரங்களுக்குக் கற்களை முட்டுக் கொடுப்பது போல, அதன் உள்முனையில் ஒரு பலூனை ஊதி முட்டு வைக்கின்றனர். அதன் வெளிமுனையை வென்டிலேட்டரின் குழாய்களோடு இணைக்கின்றனர். இப்போது பயனாளியின் இரண்டு நுரையீரல்களுக்கும் ஆக்ஸிஜன் ஒரே அளவில் பயணம் செய்கிறது. அங்கு சேரும் கார்பன்-டை-ஆக்ஸைடை வென்டிலேட்டர் உறிஞ்சி எடுத்து விடுகிறது.
வென்டிலேட்டர் பெட்டியில் பயனாளிக்கு எவ்வளவு ஆக்ஸிஜன், எந்த அழுத்தத்தில் கொடுப்பது போன்றவற்றுக்கு கன்ட்ரோல் அமைப்பு இருக்கும். அதை தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவரின் (Intensivist) மேற்பார்வையில் மருத்துவ உதவியாளர்கள் அருகில் இருந்து கவனித்துக் கொள்வார்கள். குளுக்கோஸ் சலைன் மூலமும் மூக்கு - இரைப்பைக் குழல் (Nasogastric tube) மூலமும் பயனாளிக்கு மருந்துகளும் உணவுகளும் வழங்கப்படும்.
எப்போது வென்டிலேட்டர் தேவை?
பொதுவாக, தலையில் பலத்த அடிபட்டு சுய நினைவு இல்லாத நிலைமை, மூளையில் ரத்தக்கசிவு, ரத்தத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகம்,மாரடைப்பு, விஷங்களின் பாதிப்பு, நிமோனியா, நாட்பட்ட சுவாசத் தடை நோய், பன்றிக் காய்ச்சல், கரோனா போன்ற ஆபத்தான நிலைமைகளில் பயனாளி சுவாசிக்க முடியாமல் திணறும் போது வென்டிலேட்டர் தேவைப்படும்.
பாதிக்கப்படும் காற்றுப் பைகள்
கரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு நுரையீரலில்தான் பிரதான பிரச்சினை. முக்கியமாக, நிமோனியா. நுரையீரலில் இரண்டு பக்கமும் நிமோனியா ஏற்படுமானால் அது ARDS. கரோனா நோயாளிகளில் ஹெச்.பிரிவினர் (H Type), எல்.பிரிவினர் (L Type) என்று இருவிதமாக இருக்கின்றனர். ARDS எனும் ஆழிப்பேரலையில் அவதிப்படுபவர்கள் ஹெச். பிரிவினர். இவர்களுக்கு நுரையீரல்களில் ஆக்ஸிஜனையும் கார்பன்-டை-ஆக்ஸைடையும் பரிமாறிக் கொள்ளும் காற்றுப்பைகள் (Air sacs) பேரிடரில் மாட்டிக் கொள்கின்றன. காற்று இருக்க வேண்டிய அந்த இடங்களில் நீர்கோர்த்துக் கொள்கிறது. அதனால் இவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. வேகவேகமாக மூச்சு விடுகிறார்கள். ஆக்ஸிஜனுக்காக அலைபாய்கிறார்கள். அப்போது வென்டிலேட்டர் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது. அவர்கள் சரியாகிறார்கள். இந்த நெறிமுறை சரிதான்.
ஆனால் சொல்லி வைத்த மாதிரி எல்லோருக்கும் இது பொருந்தாது. முக்கியமாக, எல். பிரிவினருக்கு வென்டிலேட்டரைப் பொருத்துவது சரியில்லை. இவர்கள் கரோனா நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்கள். பாதிப்பாளர் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பவர்களும் இவர்களே. இவர்களுக்கு உண்டாகும் பிரச்சினை வித்தியாசமானது.
அது என்ன பிரச்சினை?
ஹெச். பிரிவினருக்கு பிரச்சினை காற்றுப் பைகள் என்றால், எல். பிரிவினருக்கு பிரச்சினை காற்றுப் பைகளுக்கு ரத்தம் ஊட்டும் ரத்தக் குழாய்கள். சந்தையில் மொத்த வியாபாரிகள் சிறு வியாபாரிகளுக்கு அவரவர் விற்பனைக்கு ஏற்ப சரக்கைப் பிரித்துக் கொடுப்பார்கள், பார்த்திருக்கிறீர்களா? அதுமாதிரிதான் நுரையீரலில் எங்கு ரத்தம் அதிகம் வேண்டும்; எங்கு தேவையில்லை என்பதை உணர்ந்து ரத்தத்தைப் பகிர்கின்றன, ரத்தக் குழாய்கள். எல்.பிரிவினருக்கு இந்தப் ‘பகிரும் உத்தி’ (Hypoxic vasoconstriction) காணாமல் போகிறது. அதனால், நுரையீரல்களுக்குள் ரத்த நடமாட்டம் குறைந்துவிடுகிறது. இதன் தொடர்ச்சியாக வாயுக்கள் பரிமாறிக் கொள்வதும் ‘லாக் டவுன்’ ஆகிறது. இவற்றின் மொத்த விளைவாக ரத்தச் சுற்றோட்டத்தில் ஆக்ஸிஜன் இல்லாமல் போகிறது. ஆனாலும், இவர்களுக்கு வென்டிலேட்டர் மூலம் ஆக்ஸிஜனை அனுப்புவது வீண்.
அதுமட்டுமல்லாமல், வென்டிலேட்டர் அனுப்பும் ஆக்ஸிஜனின் அழுத்தமானது (PEEP) ஆற்றில் அழகர் இறங்கும் போது ஏற்படும் தள்ளுமுள்ளு போன்றது. இது ஏற்கனவே ஊனமாகிவிட்ட நுரையீரல்களை நொருக்கி விடுகிறது. அப்போது உடலுக்குள் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது (Multi organ failure). இதனால் பயனாளிக்கு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த ஆபத்தைத் தவிர்க்க வேண்டும். எப்படி?
மாற்று ஏற்பாடுகள்
‘எல். பிரிவினருக்கு ஏற்படும் மூச்சு முட்டலைக் குறைக்க வென்டிலேட்டருக்கு மாற்றாக, மாஸ்க் அல்லது BiPAP மூலம் ஆக்ஸிஜன் செலுத்துவது பலன் தரும்’ என்கிறார் கேமரூன். ‘இது குறைவான அழுத்தத்தில் ஆக்ஸிஜனை வழங்குவதால், நுரையீரல்களைப் பாதிப்பதில்லை. நோய் கட்டுப்படும் போது ‘ரத்தம் பகிரும் உத்தி மறந்த’ ரத்தக் குழாய்களும் புத்துணர்வு பெறும்; வாயுக்கள் பரிமாறிக் கொள்ளப்படும். சுவாசம் மீளும்.
மேலும், பயனாளியைக் குப்புறப் படுக்க வைத்தால் நுரையீரல்களில் ரத்தம் போக அதிக வசதி கிடைக்கிறது. பாதிப்பின் ஆரம்பத்தில் இருந்தே இதை நடைமுறைப் படுத்தினால் பயனாளிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுவது குறைகிறது. அடுத்து, ஆக்ஸிஜனோடு நைட்ரிக் ஆக்ஸைடையும் கலந்து கொடுத்தால் ரத்தக் குழாய்களை விரித்துக்கொண்டு ஆக்ஸிஜன் நுழைய முடியும். அப்போது உயிர் பிழைத்துக்கொள்வார்கள்’ என்கிறார் கேமரூன். ஆகவே, உலக சுகாதார நிறுவனம் இந்தப்பிரச்சினையை அலசி ஆராய்ந்து மருத்துவர்களுக்கு சரியான நெறிமுறையைக் காட்டினால், கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT