Published : 21 Apr 2020 06:48 PM
Last Updated : 21 Apr 2020 06:48 PM

கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிருக்குப் போராடிய கறவை மாடு: காப்பாற்றி விவசாயியின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த அரசு கால்நடை மருத்துவர்கள்

மதுரை அருகே கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிருக்கு போராடிய கறவை மாட்டிற்கு உரிய சிகிச்சை அளித்து அதன் உயிரை அரசு கால்நடை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். இதன் மூலம் ஏழை விவசாயியின் வாழ்வாதாரத்தை அவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனியாண்டி. இவர் 5 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார்.

அவற்றில் ஒரு ஜெர்சி இன கறவை மாட்டை கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாலை 5 மணியளவில் கட்டுவிரியன் பாம்பு கடித்தது. மாடுகள் சத்தம்போட்டதால் கண் விழித்துப் பார்த்த விவசாயி முனியாண்டி, கறவை மாட்டை பாம்பு கடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பெரும்பாலும், மாடுகளைப் பாம்பு கடித்தால் நாட்டு வைத்தியம் பார்ப்பார்கள். அதில், கட்டுவிரியன் போன்ற விஷ பாம்புகள் கடித்தால் அவை உயிர் பிழைப்பது கஷ்டம்.

ஆனால், முனியாண்டி பாம்பு கடித்து உயிருக்குப் போராடிய தன்னுடைய கறவை மாட்டை காப்பாற்ற உடனடியாக அருகில் உள்ள முடுவார்பட்டி அரசு கால்நடை மருந்தக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார்.

திருமங்கலம் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அறிவுரையின்படி மருத்துவக் குழுவினருடன் கால்நடை உதவி மருத்துவர் ஜோசப் அய்யாத்துரை விவசாயி முனியாண்டி வீட்டிற்குஅ சென்று பாம்பு கடித்த மாட்டினை பரிசோதனை செய்து உரிய சிகிச்சை மேற்கொண்டார்.

டெட்டனஸ் டாக்ஸாய்டு, ஆன்டிபயாடிக், வலி நிவாரண ஊசி மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் உள்ள விரியன் பாம்பு விஷமுறிவு மருந்து வாய் வழியாகவும் செலுத்தி மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து 4 நாட்கள் மருத்துவக்குழு கண்காணிப்பில் இருந்த பசுமாடு தற்போது அபாய கட்டத்தைத் தாண்டி, முகப்பகுதியில் வீக்கம் வற்றி, பூரன குணம்பெற்று மிகவும் இயல்பான நிலைமைக்கு திரும்பியது.

இதுகுறித்து கால்நடை மருத்துவர் ஜோசப் அய்யாத்துரை கூறுகையில், ‘‘கிராமப்புறங்களில் வாழும் அடித்தட்டு ஏழை எளிய விவசாய மக்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய கால்நடைகளில் கறவை மாடுகள் முக்கிய இடத்தை வகித்து வருகிறது.

இதுபோன்ற ஆபத்து காலத்தில் காலந்தாழ்த்தாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை தொடர்பு கொண்டு, உரிய சிகிச்சையை தொடங்குவதன் மூலம் விலைமதிப்பற்ற கால்நடைகள் உயிரை காப்பாற்றலாம், ’’ என்றார்.

விவசாயிகளுக்கு அவர்களின் அன்றாட வாழ்வாதாரமே அவர்களுடைய கறவை மாடுகள்தான். ‘கரோனா’ ஊரடங்கிலும் கால்நடை மருத்துவர்கள் விரைவாக செயல்பட்டு அந்த விவசாயின் மாட்டை காப்பாற்றி அவரின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x