Published : 21 Apr 2020 05:12 PM
Last Updated : 21 Apr 2020 05:12 PM
அன்னையின் கோரிக்கைகாக தனது தங்கையை அழைத்துச் செல்வதற்காக மதுரையைச் சேர்ந்த இளைஞர் பழுதான சைக்கிளிலேயே தேனி வந்தார். டயரில் காற்று இறங்கிக் கொண்டே இருந்ததால் வழிநெடுகிலும் தான் வைத்திருந்த பம்ப்பில் காற்றடித்தபடி மிகவும் சிரமப்பட்டு தனது தங்கையை வந்து சந்தித்தார்.
கரோனாவினால் தற்போது நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநில, மாவட்ட தொழிலாளர்கள் பலரும் தொடர்ந்து தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கினால் தனது தங்கையை அழைத்துச் செல்ல அண்ணன் பழுதான சைக்கிளிலே மதுரையில் இருந்து தேனி வந்துள்ளார்.
இது குறித்த விவரம்: மதுரை கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் முத்து, தமிழ்செல்வி. இவர்களுக்கு ஜீவராஜ் (22) என்ற மகனும், பிரவீனா (20) என்ற மகளும் உள்ளனர். முத்து சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் தமிழ்செல்வி தனியார் பள்ளியில் தூய்மைப் பணியாளராக உள்ளார்.
பிரவீனா தேனியில் உள்ள தனியார் கண் மருத்துமனையில் நர்சிங் முடித்துவிட்டு அங்கேயே பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் தாய் தமிழ்செல்விக்கு உடல்நிலை சரியில்லை. எனவே பிரவீனாவை எப்படியாவது அழைத்து வரும்படி தனது மகன் ஜீவராஜிடம் கூறியுள்ளார்.
தற்போது ஊரடங்கு இருக்கும் நிலையில் தனது தங்கையை எப்படி அழைத்து வருவது என்று ஜீவராஜ் குழம்பி உள்ளார். வேறுவழியின்றி தனது சைக்கிளில் கிளம்ப முடிவு செய்தார். டியூப் பழுதாக இருந்ததால் காற்று வெளியேறிவிடும். எனவே காற்று அடிக்கும் பம்ப்பையும் கேரியரில் வைத்துக் கொண்டார்.
மதுரையில் இருந்து கிளம்பிய ஜீவராஜ் 85 கிமீ.தூரத்தை கடந்து நேற்று இரவு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சைக்கிளில் செல்ல வேண்டாம். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறலாம் என்று கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்த காரில் மதுரை நோக்கி கிளம்பிச் சென்றனர்.
ஊரடங்கு நேரத்தில் தனது தங்கைக்காக பழுதான சைக்கிளில் வந்த அண்ணன் பாசம் இப்பகுதி போலீஸ் மற்றும் மருத்துவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஜீவராஜ் கூறுகையில், இரண்டு டயரும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் ஒரு கிமீ. சென்றதும் காற்று இறங்கிவிடும். மீண்டும் காற்றடித்துவிட்டு கிளம்புவேன். இதனால் காலையில் கிளம்பிய நான் தேனி வருவதற்குள் இரவாகிவிட்டது.
மருத்துவமனை செக்யூரிட்டியிடம் கேட்ட போது காலையில்தான் பார்க்க முடியும் என்றனர். எனவே மருத்துவமனை முன்பு இருந்து பயணிகள் நிழற்குடையில் தூங்கிவிட்டேன்.
மறுநாள் மருத்துவமனையில் விபரத்தை சொன்னதும், கிளம்பிச் செல்ல ஏற்பாடு செய்தனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT