Published : 21 Apr 2020 04:46 PM
Last Updated : 21 Apr 2020 04:46 PM

ரம்ஜான் மாதத்தில் ஊரடங்கு, சமூகவிலகலைக் கடைபிடிப்போம்; ஏழைகளுக்கு உதவுவோம்: இஸ்லாமிய சமூக  அரசு, காவல்துறை அதிகாரிகள் வேண்டுகோள்

சென்னை

ரம்ஜான் மாதத்திலும் ஊரடங்கு மற்றும் சமூகவிலகலை நாம் கடைபிடிப்பதுடன் பசியோடும், தேவையோடும் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தமிழக அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சகோதர, சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும், ரம்ஜான் வாழ்த்துகள்

பெருந்தொற்று ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் ரம்ஜான் நம்மை நோக்கி வந்துள்ளது. பெரும் நெருக்கடியில் இருந்து மனித குலத்தை விடுவிக்க இந்த புனித மாதத்தில் அல்லாஹ் அருள் புரியட்டும்.

கரோனா வைரஸ் நேரடி தொடர்பால் பரவி வரும் சூழலில் சமூக விலகல் என்பது மிக முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். தற்போது காஃபாவில் தவாஃப் இவ்வாறே உள்ளது.

கடந்த 2 மாதங்களாக எந்த ஒரு மசூதிகளிலும் கூட்டுத்தொழுகை நடைபெறவில்லை.

கடுமையான மழை, குளிர் போன்ற மோசமான வானிலை காலங்களில் ஜமாத் தொழுகைக்காக மசூதிக்கு வரத் தேவையில்லை, வீடுகளில் இருந்து தொழுகை நடத்துங்கள் என முஅத்தினிடம் நபிகள் நாயகம் (அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.) அறிவிக்க சொன்னார்கள்.

வானிலை என்பதை பெருந்தொற்று காலத்துடன் ஒப்பிட முடியாது. அலட்சியமாக செயல்படுவதன் மூலம் மரணம் அல்லது துன்பம் நேரும்படி செய்தால் சட்டத்தின்படி கடுமையான குற்றமாகவும், மார்கத்தின்படி பாவமாகவும் ஆகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தகாலத்தில் கவனக்குறைவுடன் செயல்படுவது பெரும் சமூக மற்றும் அரசியல் விளைவுகளை கொண்டு வந்து விடும். மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு மற்றும் சமூகவிலகலை நாம் கடைபிடிப்போம்.

ரம்ஜான் மாதத்தில் நம்மில் பலர் தராவீஹ் தொழுகைக்கு ஆவலுடன் இருப்போம். ஆனால் அது ஃபர்ளு அல்ல என்பது நமக்கு தெரியும். தற்போதைய சூழ்நிலையில் ஃபர்ளான தொழுகைகள் ஜமாத்தாக நடைபெறாத நிலையில் தராவீஹ் தொழுகையை கூட்டாக நடத்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

சகோதர, சகோதரிகளே, மனிதகுலமே பெரும் வேதனைக்கு ஆளாகியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பசி போன்றவை பெரும் மக்களை வாட்டுகிறது. மனித குலத்துக்கு தொண்டாற்றுவதே இறைவனுக்கு தொண்டாற்ற சிறந்த வழி. தொண்டை விட சிறந்த வழிபாடு இல்லை. பசியோடும், தேவையோடும் இருப்பவர்களுக்கு உதவுவதன் மூலம் இந்த ரம்ஜானில் இறையருளை பெறுவோம்.

உங்கள் துஆக்களை ( வேண்டுகோள்களை) அல்லாஹ் ஏற்று பெருந்தொற்றை இந்த மாதத்தில் நீக்கி தரட்டும் .
ஆமீன்

சையது முனீர் ஹோடா ஐஏஎஸ் ( ஓய்வு)
குத்சியா காந்தி ஐஏஎஸ்( ஓய்வு)
எம்எப் பரூக்கி ஐஏஎஸ்( ஓய்வு)
கே.அலாவுதீன் ஐஏஎஸ்( ஓய்வு)
எம்.எஸ் ஜாபர் சேட் ஐபிஎஸ், டிஜிபி/சிபிசிஐடி
எம்.டி நிஜாமுதீன், ஐஏஎஸ், கூடுதல் தலைமைச் செயலாளர் , தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
சையது முஸமில் அப்பாஸ் ஐஎப்எஸ், பிசிசிஎப்/ தலைர் வனத்துறை கழகம்
எம்டி ஷகில் அக்தர், ஐபிஎஸ், ஏடிஜிபி/ குற்றம்
எம்ஏ சித்திக் ஐஏஎஸ் ஆணையர், வணிக வரித்துறை
நஜ்மல் ஹோடா ஐபிஎஸ், ஐஜிபி/சிவிஓ, டிஎன்பிஎல்
அனிசா ஹுசைன் ஐபிஎஸ், ஐஜிபி/ டிஐஜி, ஐடிபிபி
கலிமுல்லா கான் ஐபிஎஸ் (ஓய்வு)
விஎச் முகமது ஹனீபா ஐபிஎஸ் (ஓய்வு)
என்எஸ் ஆசியாம்மாள் ஐபிஎஸ், டிஐஜி ,தொழில்நுட்ப சேவை
ஜியாவுல் ஹக், ஐபிஎஸ், எஸ்பி திருச்சி
எப்ஆர் இக்ராம் முகமது ஷா ஐஎப்எஸ் (ஓய்வு )

ஆகியோர் இணைந்து இந்த கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x