Published : 21 Apr 2020 04:50 PM
Last Updated : 21 Apr 2020 04:50 PM
பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்கக் கூடாது என, தமிழ்நாடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் விதிகளின்படி 5 ஆயிரம் மக்கள்தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்பட வேண்டும். இவர்களின் முக்கியப் பணி டெங்கு, காலரா, சிக்குன் குனியா தடுப்பு, கொள்ளை நோய் தடுப்பு போன்றவையாகும்.
தமிழகம் முழுவதும் 9,000 துணை சுகாதார நிலையங்களும், 1,750 ஆரம்ப சுகாதார நிலையங்களும் இருக்கின்றன. இவ்விடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்களுக்கான காலிப் பணியிடங்கள் கடந்த பத்தாண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதால்தான் முழுமையாக டெங்கு உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியாமலும், தற்போது ஏற்பட்டுள்ள கரோனா போன்ற புதிய நோய்த் தாக்குதலுக்கு முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சிவகுரு கூறியதாவது:
"தமிழகத்தில் கடந்த 1995-ம் ஆண்டிலிருந்து புதிய நிலை-2 சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்தை பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவ இயக்குநர் அலுவலகம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால், 11 ஆயிரம் சுகாதார ஆய்வாளர் இருக்க வேண்டிய இடத்தில் 2,500க்கும் குறைவானவர்களே உள்ளனர்.
தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தற்போது 2,715 பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள் நிலை-2 பணியிடங்களை, அரசுப் பணியாளர் பணி அமைப்பு விதிமுறைகளுக்குப் புறம்பாக 'அவுட்சோர்ஸ்' மூலம் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை மூலம் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் நியமனம் செய்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைக்கூட அரசு உத்தரவில் உள்ளபடி நியமனம் செய்யாமல், 'அவுட்சோர்ஸ்' முறையில் தனியார் ஏஜென்சிகள் மூலம் நியமனம் செய்வதற்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. இதுபோன்ற, 'அவுட்சோர்ஸ்' முறையில் தனியார் ஏஜென்சிகள் மூலம் கடந்த 10, 15 ஆண்டுகளாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையிலும், மருத்துவத் துறையிலும் ஓட்டுநர்கள், ஆய்வக நுட்புனர்கள், மருந்தாளுநர்கள், ஆற்றுப்படுத்துநர், மருத்துவமனைப் பணியாளர் உள்ளிட்ட 15 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதுவரை பணி நிரந்தரம் செய்யாமலும், முறையாக மாத ஊதியம் கிடைக்காமலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். தற்போதும், 'அவுட்சோர்ஸ்' முறையில் நியமனம் செய்யப்படும், 2,175 சுகாதார ஆய்வாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய முடியாத நிலைதான் ஏற்படும்.
பொது சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 11 ஆயிரம் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை படிப்படியாக 2010-ல் மாநில அரசு அரசாணை வெளியிட்டும், 2018-ல் மத்திய அரசு ஒப்புதல் அளித்தும் இத்தனை ஆண்டுகளாக காலியாக இருக்கின்றன. 11 ஆயிரம் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரந்தரமாகப் பணி நியமனம் செய்யாமல் தமிழக அரசு இருந்து வருகிறது.
எனவே, தமிழக அரசு 11 ஆயிரம் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களையும், 'அவுட்சோர்ஸ்' முறையில் நியமிக்காமல் அரசுப் பணியாளர் பணி அமைப்பு விதிகளின்படி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியவாறு 50 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட ஒரு துணை சுகாதார நிலையத்திற்கு ஒரு சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நியமிக்க வேண்டும்".
இவ்வாறு சிவகுரு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT