Published : 21 Apr 2020 03:01 PM
Last Updated : 21 Apr 2020 03:01 PM

கரோனா: மருத்துவப் பணியில் ஈடுபட்டு மரணமடைபவர்களுக்கு ரூ.50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு வழங்குக; முதல்வருக்கு சிபிஎம் வலியுறுத்தல்

கே.பாலகிருஷ்ணன் - முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

கரோனா மருத்துவப் பணியில் ஈடுபட்டு மரணமடைபவர்களுக்கு மாநில அரசு தன் பங்குக்கு ரூபாய் 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஏப்.21) முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில், "மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் பாராமல், தங்களது உயிரை துச்சமென மதித்து, தங்களது குடும்பத்தினரைப் பற்றிக் கூட கவலைப்படாமல், கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களை முழுமையாக குணப்படுத்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பணி செய்து வருகின்றனர்.

இம்மகத்தான பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த 14 மருத்துவர்கள் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல செவிலியர்களும் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

மேலும், இரண்டு மருத்துவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இத்தகைய நிலைமை அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மருத்துவர்களையும் மற்ற பணியாளர்களையும் ஊக்குவிக்காது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை ஊழியர்களுக்கு அவர்கள் நம்பிக்கையோடு பணிபுரிகின்ற வகையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

1. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு சர்வதேச தரத்திலான பிபிஇ பாதுகாப்பு உபகரணங்கள் அனைவருக்கும் வழங்கிட வேண்டும். எதிர்காலத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள யாருக்கும் கரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2. இந்த பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம்தான் பணி என்பதை நிர்ணயிக்க வேண்டும். அவர்களுடைய பணி நாட்கள் முடிந்தவுடன் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

3. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கு பணி நேரத்தில் தரமான உணவு வழங்கப்படுவதுடன் தனிமைப்படுத்தப்படும் காலத்தில் அவர்கள் பணிபுரிகிற மருத்துவமனை வளாகத்திற்கு உட்பட்ட அப்பகுதியில் அவர்களை தங்க வைக்காமல், மருத்துவமனை வளாகத்திற்கு வெளியில் ஆரோக்கியமான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

4. கரோனோ தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவத்துறை ஊழியர்களுக்கும் கரோனா தொற்று இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

5. கரோனா மருத்துவப் பணியில் ஈடுபட்டு மரணமடைபவர்களுக்கு ரூபாய் 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசும் தன் பங்குக்கு ரூபாய் 50 லட்சத்திற்கு (ஆக மொத்தம் ரூ 1 கோடி) மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவர்களது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அவரது தகுதிக்கேற்ற அரசுப் பணி வழங்கிட வேண்டும். இத்தகைய சலுகை தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் உள்ள ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

6. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கனிவுடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களை அவர்களது பணியிடம் மாற்றத்தை ரத்து செய்து, ஏற்கெனவே அவர்கள் பணிபுரிந்த இடத்திலேயே மீண்டும் அவர்களுக்கு பணி மாறுதல் வழங்கி உத்தரவிட வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

7. அரசு மருவத்துவமனைகளில் பல ஆண்டுகளாக பணியமர்த்தப்பட்டு நிரந்தரம் செய்யப்படாத அனைத்து செவிலியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

எனவே, தமிழக முதல்வர், மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x