Published : 21 Apr 2020 02:39 PM
Last Updated : 21 Apr 2020 02:39 PM
உண்டியல் சேமிப்புப் பணத்தை அனுப்பிய 1-ம் வகுப்பு மாணவிக்கு, தனது ட்விட்டர் பதிவில் முதல்வர் பழனிசாமி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கும் அமலில் இருக்கிறது. மேலும், ரேபிட் கிட்ஸ் தமிழகம் வந்துவிட்டதால் அதிகப்படியான டெஸ்ட்டிங் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
பொதுமக்களும் வீட்டிற்குள்ளேயே இருப்பதால், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களும் தடையின்றிக் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்கலாம் என்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து முன்னணி நிறுவனங்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
மேலும், தனது ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு நிதியுதவி அளித்த தகவல்களை வெளியிடுபவர்களுக்கு தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி இன்று (ஏப்ரல் 21) ரமேஷ்குமார் என்பவர் ஹேமஜெயஸ்ரீ என்ற 1-ம் வகுப்பு மாணவி எழுதிய கடிதத்தை தமிழக முதல்வரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு வெளியிட்டு இருந்தார்.
அந்தக் கடிதத்தில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஐயாவுக்கு வணக்கம். என் பெயர் ஹேமஜெயஸ்ரீ. தஞ்சை மாவட்டம் திருவடைமருதூர், திருபுவனம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவள். ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கின்றேன். கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க எனது உண்டியலில் சேமித்து வைத்த ரூ.543 பணத்தை என் அப்பாவின் வங்கிக் கணக்கில் இருந்து முதலமைச்சர் ஐயாவுக்கு அனுப்புகின்றேன். நன்றி" என்று ஹேமா ஜெயஸ்ரீ குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், "சிறு வயதிலேயே பிறருக்கு உதவும் உயர்ந்த பண்புடன் நம் குழந்தைகள் வளர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனா நிவாரணத்திற்காக, தான் சேமித்து வைத்திருந்த தொகையை வழங்கியுள்ள தஞ்சை - திருபுவனத்தைச் சேர்ந்த குழந்தை ஹேமஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்!" என்று குறிப்பிட்டுள்ளார்
சிறு வயதிலேயே பிறருக்கு உதவும் உயர்ந்த பண்புடன் நம் குழந்தைகள் வளர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
கொரோனா நிவாரணத்திற்காக, தான் சேமித்து வைத்திருந்த தொகையை வழங்கியுள்ள தஞ்சை - திருபுவனத்தை சேர்ந்த குழந்தை ஹேமஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! https://t.co/tq9qnAY8br— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 21, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT