Published : 08 Aug 2015 11:51 AM
Last Updated : 08 Aug 2015 11:51 AM
ஒரு சட்டப் பேரவை தொகுதிக்கு 4 ஆயிரம் தேர்தல் பணிக் குழு உறுப்பினர்களை நியமிக்க திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்காக கிராமங்கள்தோறும் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்து வதில் திமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழக சட்டப் பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் பணிகளில் குழப்பத்தை தவிர்க்க சட்டப் பேரவை தொகுதி வாரியாக மாவட்ட எல்லைகளையும் திமுக மாற்றியுள்ளது. கிராமப் பஞ்சாயத்துக்கள்தோறும் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தவும், ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு முகவர், 15 தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் அடங்கிய பட்டியலை இம்மாதத்துக்குள் தயா ரித்து அனுப்ப கட்சித் தலைமை உத்தர விட்டுள்ளது. இதற்கான பணிகளில் மாவட்டச் செயலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த முறையில் தேர்தல் பணிக்குழு அமையும்போது சட்டப் பேரவை தொகுதிக்கு 4 ஆயிரம் பேர் வரை நியமிக்க வேண்டியுள்ளது. இதற்காக ஒன்றியச் செயலாளர் தலைமையில் தினமும் 2 முதல் 3 கிராமங்களில் கலந்தாய்வுக் கூட்டங்களை கட்சியினர் நடத்தி வருகின்றனர்.
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட த்தில் நடைபெற்று வரும் இப்பணி குறித்து மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி கூறியதாவது:
ஏராளமான வாக்காளர்களை ஒதுக்கி வைத்து தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வழங்கியுள்ளது. இப்பட்டியல் சரியானதா?, யாரும் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளனரா? என்பதை ஆய்வு செய்வது மிக முக்கியம். இதை வட்டச் செயலாளரோ, ஒன்றியச் செயலாளரோ செய்ய முடியாது. இதனால் வாக்குச்சாவடி வாரியாக ஒரு முகவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஒரு வாக்குச்சாவடிக்கு தேர்தல் பணிக் குழுவினர் 15 பேர் தேர்வும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதியிலும் 250 முதல் 300 வாக்குச்சாவடிகள் வரை உள்ளன. இதன்படி தொகுதிக்கு சராசரியாக 4 ஆயிரம் முதல் 4,500 பேர் வரை தேர்தல் பணிக்குழுவில் இடம் பெறுவர்.
ஒரு பணிக்குழு உறுப்பினரின் கீழ் 70 முதல் 100 வாக்காளர்கள், 25 வீடுகள் வரை கண்காணிப்பில் இருக்கும். இப்பணிக்குழுவினரால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை சரியாகக் கண்டுபிடிக்க முடியும். மேலும் இவர்கள் மூலமே தேர்தல் பணியை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியும்.
இதனால் தேர்தல் பணிக்குழுவினரை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறோம். இதற்காகத்தான் ஜாதி, மதம், தெரு, பல்வேறு பொறுப்பில் உள்ள வர்கள், பெரிய குடும்பத்தினர், செல்வாக்கு மிக்கவர்கள் எனப் பல வழிகளில் ஆய்வு செய்து தேர்ந்தெடுத்து நியமிக்கிறோம். மிகச்சரியாக இப்பணியை மேற் கொள்ள சில நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கட்சித் தலைமையிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். இதற்காக கிராமங்கள்தோறும் கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு கிராமத்துக்கும் நூற்றுக்கணக்கானோர் பெயர்கள் இடம் பெறும் பிரசுரங்களை அச்சடிக்கிறோம்.
இக்கூட்டங்களில் அதிமுக அரசை குறைகூறுவதை தவிர்த்து, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்கிறோம். கிராமங்கள்தோறும் 300 பேருக்கு குறையாமல் பங்கேற்கின்றனர். இலவசம் வேண்டாம், மதுவை ஒழியுங்கள், முதியோர் உதவித் தொகையை விடுபடாமல் வழங்குங்கள் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது.
இம்மாதத்துக்குள் தொகுதிக்கு 4 ஆயிரம் தேர்தல் பணிக்கு ழுவினரின் பட்டியல் தலைமைக்கு அனுப்பிவிடுவோம். பின்னர் தேர்தல் பணிகளில் வேகம் காட்டுவோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT