Last Updated : 21 Apr, 2020 12:31 PM

 

Published : 21 Apr 2020 12:31 PM
Last Updated : 21 Apr 2020 12:31 PM

ஊரடங்கால் உணவுக்கு தவிக்கும் அழகர்மலை குரங்குகள்: உணவளித்து உதவும் துணை ஆட்சியர்

மதுரை

ஊரடங்கால் பக்தர்கள் வருகை இல்லாததால் உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் அழகர்மலை குரங்குகளுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார் துணை ஆட்சியர் என்.முருகேசன்.

மதுரையில் இந்த மாதம் திருவிழா மாதம். சித்திரை திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள் இப்போது நடைபெறும்.

இதனால் மதுரை மீனாட்சியம்மன் கோவில், அழகர்கோவில், சோலைமலை முருகன்கோவில், ராக்காயி அம்மன் கோவில், நூபுர கங்கை தீர்த்தப் பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியிருக்கும். அழகர்மலை குரங்குகளுக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு பக்தர்கள் உணவு வழங்குவர்.

இந்நிலையில் கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் கோவில்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் அழகர்மலையில் வாழும் ஆயிரக்கணக்கான குரங்குகள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றன.

இந்த குரங்குகளுக்கு ஊரடங்கு அமலான நாளிலிருந்து உணவு வழங்கி வருகிறார் மதுரை ஆதிதிராடர் மற்றும் பழங்குடியின நலத்துறை துணை ஆட்சியர் முருகேசன். தினமும் அழகர்மலைக்கு செல்லும் அவர் அடிவாரத்தில் தொடங்கி ராக்காயி கோவில் வரை நடந்து சென்று குரங்குகளுக்கு பொரி, கடலை, வாழைப்பழம் மற்றும் தண்ணீர் வழங்கி வருகிறார்.

அவர் கூறுகையில், ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றோருக்கு பலர் உணவு மற்றும் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர். மனிதர்களைப் போல் வாயில்லா ஜீவன்களையும் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். இதனால் தினமும் குரங்குகளுக்கு உணவு வழங்கி வருகின்றேன். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x