Published : 21 Apr 2020 12:16 PM
Last Updated : 21 Apr 2020 12:16 PM
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தொல்.திருமாவளவன் இன்று (ஏப்.21) வெளியிட்ட அறிக்கையில், "உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கிறது. எனவே, பெட்ரோல் - டீசல் விலையைப் பாதியாகக் குறைக்குமாறு மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
கரோனா நோய்த்தொற்றின் காரணமாகப் பல்வேறு நாடுகள் ஊரடங்கைக் கடைப்பிடிப்பதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க சந்தையில் நேற்று அது பூஜ்ஜியம் டாலருக்கு சரிந்தது. உலகச் சந்தையில் ஒரு பேரல் 15 டாலர் என்ற விலையில் கச்சா எண்ணெய் இப்போது விற்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருப்பதற்குக் காரணம் மத்திய அரசின் வரி விதிப்புக் கொள்கைதான். 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்கும் போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9.48 ரூபாய் மத்திய வரி விதிக்கப்பட்டது. டீசல் மீது ஒரு லிட்டருக்கு 3.56 ரூபாய் விதிக்கப்பட்டது.
தற்போது, பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 22.98 ரூபாய் வரியும் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 18.83 ரூபாய் வரியும் விதிக்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதன் பலன் இந்தியாவில் உள்ள பொதுமக்களுக்குக் கிடைப்பதில்லை. மக்களுக்குக் கிட்ட வேண்டிய பயன்களை மத்திய பாஜக அரசு வழிப்பறி செய்து கொள்கிறது.
அப்படி வரிவிதித்து சேர்த்த பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிடாமல், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை ரத்து செய்வதற்குப் பயன்படுத்துகிறது.
தற்போதும்கூட கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் அதனை மறைத்து வழக்கம் போல வரியை உயர்த்தி வழிப்பறி செய்யாமல், அதன் பலன் பொதுமக்களுக்குச் சேரும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திட மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
முழு அடைப்பில் தளர்வு செய்து சரக்குப் போக்குவரத்துக்கு அனுமதித்துள்ள மத்திய அரசு உடனடியாக சுங்கக் கட்டணத்தை உயர்த்தியதோடு எல்லா சுங்கச்சாவடிகளிலும் வசூல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மக்களைச் சுரண்டுவதே மத்திய அரசின் தலையாயக் கொள்கையாக இருக்கிறது.
தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையாக சரிந்துள்ள நிலையில், வழக்கம்போல மக்கள் உழைப்பைச் சுரண்டுவதற்கு முயற்சிக்காமல், தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்குத் துணை போகாமல், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையைப் பாதியாகக் குறைத்திட வேண்டும் என மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்" என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT