Published : 21 Apr 2020 11:36 AM
Last Updated : 21 Apr 2020 11:36 AM
கரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்க நேரிடுவோரை நல்லடக்கம் செய்ய கோவைக்கு அருகிலுள்ள தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தருவதாக மதிமுகவின் மாநில இளைஞரணிச் செயலாளர் வே.ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.
கரோனா தொற்றுக்கு ஆளாகி மரணிக்க நேரிடுவோரை இடுகாடுகளில் அடக்கம் செய்யவும், கரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கான சிறப்பு முகாம்களை உருவாக்கவும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். மனிதாபிமானமற்ற இந்தச் செயல்கள் குறித்துப் பல்வேறு தரப்பிலுமிருந்தும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம், தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரிடுவோரை நல்லடக்கம் செய்ய தனது ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இடம் ஒதுக்கித் தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்தார்.
இதேபோல், மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் வே.ஈஸ்வரனும், கரோனா தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரிடுவோரின் நல்லடக்கத்திற்காக கோவைக்கு அருகிலுள்ள தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசிடம் தெரிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிலையில், ஈஸ்வரனின் இந்த அறிவிப்பு மதிமுகவில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் பேசுபொருளாகி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT