Published : 21 Apr 2020 11:33 AM
Last Updated : 21 Apr 2020 11:33 AM
புதுச்சேரியில் ஒருமாத கால இடைவெளிக்குப் பிறகு உணவகங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. ஆனால், அவற்றில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஏழை மக்களுக்காக 10 ரூபாய்க்கு 4 சப்பாத்தி, குருமாவுடன் தொண்டு நிறுவனம் ஒன்று விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.
கரோனா நோய்த்தொற்று எச்சரிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் புதுச்சேரியில் உள்ள உணவகங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், இந்த உணவகங்கள் இன்று (ஏப்.21) முதல் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. அவற்றிலும் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. அதிக அளவில் கூடி நோய்த்தொற்று ஏற்படாத வகையில் பார்சல் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறைந்த அளவிலேயே உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்தியன் காபி ஹவுஸின் அனைத்துக் கிளைகளும் இன்று திறக்கப்பட்டன. அனைத்து உணவுகளும் தயார் செய்யப்பட்டு பார்சல் மூலம் அனுப்பப்படுகிறது. பார்சல் வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதேபோல் சிறிய அளவிலான உணவகங்களும் பார்சல் சேவையுடன் செயல்படத் தொடங்கிவிட்டன.
பத்து ரூபாய்க்கு 4 சப்பாத்தி
புதுச்சேரியில் ஏழை மக்களுக்காக தனியார் தொண்டு நிறுவனத்தின் நடமாடும் குறைந்த விலை உணவகம் திறக்கப்பட்டுள்ளது. 'அன்ன பிரதோஷன சாரிட்டபிள் டிரஸ்ட்' என்ற தொண்டு நிறுவனம் சார்பில் ஊரடங்கு உத்தரவு நிறைவடையும் வரை இந்த உணவகம் செயல்பட உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம், சப்பாத்தி, குருமா ஆகியவை வாகனங்களில் எடுத்து வரப்பட்டு ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் விற்கப்படுகிறது. நான்கு சப்பாத்தி, குருமா ரூ.10க்கு தரப்படுகிறது.
இந்த சப்பாத்தி மற்றும் குருமாவை தயாரிக்க தனியார் கல்வி நிறுவனம் தனது நவீன கேன்டீனை அறக்கட்டளை நிறுவனத்துக்கு இலவசமாகத் தந்துள்ளது. இங்குதான் தற்போது சப்பாத்தி, குருமா தயாராகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT