Published : 21 Apr 2020 10:36 AM
Last Updated : 21 Apr 2020 10:36 AM
கரோனா ஆபத்தில் இதழாளர்கள் இருப்பதால், தமிழக அரசு செய்தியாளர் சந்திப்புகளைக் கைவிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.21) வெளியிட்ட அறிக்கையில், "சென்னையில் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மூவருக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மேலும், பல பத்திரிகையாளர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அவர்களுக்கும் கரோனா வைரஸ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் ஆளாவோர் பட்டியலில் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக பத்திரிகையாளர்கள்தான் உள்ளனர். மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியிலும் கணிசமான பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பரவல் அச்சம் காரணமாக அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து வகை மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், இதழாளர்கள் உள்ளிட்ட ஊடகத்துறை பணியாளர்கள், சில உணவு வழங்கும் நிறுவனங்களின் விநியோக ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர்தான் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.
மேற்கண்ட அனைத்துத் துறையினரும் கரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் மருத்துவத்துறை பணியாளர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் தான் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
களப்பணி ஆற்றுவோரில் மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினரின் பங்களிப்பை எவ்வகையிலும் குறைக்க முடியாது; மாறாக, அவர்களுக்கு உயர்தர பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் முகக் கவசங்களை வழங்குவதன் மூலம் பாதுகாக்க முடியும். அதேநேரத்தில், பத்திரிகையாளர்களைப் பொறுத்தவரை பணி முறைகளை சற்று மாற்றியமைப்பதன் மூலம் அவர்களைக் கரோனா தொற்றிலிருந்து காப்பாற்ற முடியும்.
கரோனா பரவல் தொடங்கிய காலத்திலிருந்தே அரசியல் கட்சிகளின் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தொண்டு நிறுவன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. களத்திற்கு நேரடியாகச் சென்று செய்தி சேகரிக்க வேண்டிய குற்றங்கள், விபத்துகள் போன்றவையும் இப்போது நடப்பதில்லை.
மாறாக, கரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள், முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், சில நேரங்களில் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் செய்தியாளர் சந்திப்புகளையும், சில நேரங்களில் சிலர் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யும் உதவி வழங்கும் நிகழ்வுகளையும் பதிவு செய்து செய்தியாக்குவதுதான் அவர்களின் முக்கியப் பணியாக உள்ளது.
கரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டு, அவை குறித்த செய்திகளை ஊடகங்களுக்குத் தெரிவிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டால், பத்திரிகையாளர்கள் களத்திற்கு வர வேண்டிய தேவை இருக்காது; அதன் மூலம் கரோனா ஆபத்திலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
அதிகாரிகளில் தொடங்கி அமைச்சர்கள், முதல்வர்கள் வரை அனைவரும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கும் தகவல்களை செய்திக்குறிப்புகளாக ஊடகங்களுக்கு அனுப்பலாம். ஒருவேளை இதுகுறித்த செய்திகள் தொலைக்காட்சிகளில் காட்சிகளாகத்தான் வர வேண்டும் என்று அரசு விரும்பினால், திரைப்படப் பிரிவு அல்லது செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் படம் பிடித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கலாம். பேரவை அலுவல்கள் அவ்வாறுதான் படம் பிடித்துத் தரப்படுகின்றன.
ஒரு செய்தியாளர் சந்திப்பை நேரலை செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு தொலைக்காட்சியில் இருந்தும் செய்தியாளர், ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவு உதவியாளர், நேரலை வாகனப் பொறுப்பாளர், நேரலை தொழில்நுட்பப் பணியாளர், அவரது உதவியாளர், வாகன ஓட்டுநர் என 7 பேர் செல்ல வேண்டும்.
குறைந்தது 20 தொலைக்காட்சிகள் செய்தியாளர் சந்திப்பில் செய்தி சேகரிக்க வந்தால் குறைந்தது 140 பேர் கூடுவர். அவர்களுடன் அச்சு ஊடக செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் ஆகியோரையும் சேர்த்தால் செய்தியாளர் சந்திப்பில் குறைந்தது 250 பேராவது கூடுவார்கள். இதைத் தவிர்த்தாலே கரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாவதிலிருந்து பத்திரிகையாளர்களைக் காப்பாற்ற முடியும்.
எனவே, கரோனா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பை அரசு கைவிட வேண்டும்; அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்றால் அவற்றின் படப்பதிவுகளை ஊடகங்களுக்கு அரசே வழங்க வேண்டும். தேவையற்ற பிற நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரிப்பதை, பாதுகாப்பு கருதி ஊடகங்கள் தவிர்க்கலாம்.
அதேபோல், ஊடக அலுவலகங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, வைரஸ் தொற்றிலிருந்து நான்காவது தூண்களின் பிரதிநிதிகளைக் காப்பாற்ற அரசும், ஊடக நிறுவனங்களும் முன்வர வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT