Published : 21 Apr 2020 09:28 AM
Last Updated : 21 Apr 2020 09:28 AM

கரோனா: விழிப்போடும் கவனமுடனும் செயல்பட பால் முகவர்களுக்கு அறிவுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் கரோனா தொற்றிலிருந்து தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, சு.ஆ.பொன்னுசாமி இன்று (ஏப்.21) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா எனும் கொள்ளை நோயிடமிருந்து தற்காத்துக் கொள்ள உலகமே வீடுகளுக்குள் முடங்கிப் போய் கிடக்கும் நேரத்தில் தினசரி அதிகாலை தொடங்கி காலை 9 மணி கடந்தும் மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை விநியோகம் செய்யும் பணியினை நாம் தடையின்றி செய்து கொண்டிருக்கிறோம்.

இக்கட்டான இத்தருணத்தில் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரும், மக்களோடு மிகவும் நெருக்கமாக இல்லை என்றாலும் கூட நாட்டு நடப்புகளை சேகரித்து நமக்கு தினமும் செய்திகளாக தந்து கொண்டிருக்கும் செய்தியாளர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்றியிருக்கிறது என வரும் செய்திகள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

மருத்துவம், காவல், தூய்மைப் பணி இவர்களுக்கு அடுத்து மக்களோடு மக்களாக மிகவும் நெருக்கமாக இருப்பதும், தினசரி மக்களோடு நகமும், சதையுமாக இணைந்து பயணிப்பதும் பால் முகவர்களாகிய நாமே. அந்த நெருக்கம்தான் தற்போது நமக்குள் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் என பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை தங்குதடையின்றி விநியோகம் செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ அதற்கு இணையாக பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மிக, மிக முக்கியமானது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை போல பால் முகவர்கள் அனைவரும் நலமுடன் இருந்தால்தான் பொதுமக்களுக்கு நம்மால் தங்கு தடையற்ற சேவையை வழங்கிட முடியும்.

அதற்கு சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் அவர்களோடு பின்னிப் பிணைந்திருக்கும் தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரின் உடல்நலமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகாமல் இருக்க வேண்டியது கண்டிப்பாக அவசியமாகும்.

எனவே நாம் அனைவரும் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தியும், சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்றியும், ஊரடங்கை சரியான முறையில் கடைபிடித்தும் செயல்படுவதோடு, பால் விநியோகம் முடித்து விட்டு வீட்டுக்குள் செல்லும் முன் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீரை பயன்படுத்தி கை, கால்களை நன்றாக சோப்போ அல்லது சானிடைசரோ பயன்படுத்தி கழுவிய பிறகு உள்ளே செல்ல வேண்டுகிறோம்.

ஏனெனில், கரோனா எனும் அரக்கன் ஏழை, பணக்காரன், மக்கள் சேவகர், வீட்டில் இருப்பவர் என்கிற பாகுபாடின்றி அனைவரையும் பீடித்து வருவதை பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட செய்தி ஊடகங்களில் பார்த்து வருகிறோம்.

எந்த ஒரு நோயாக இருந்தாலும் அது வந்த பின் வருந்துவதை விட வரும் முன் காப்பதே சாலச்சிறந்தது. கவனமுடன் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதோடு மக்கள் நலப் பணிகளை தடையின்றி செய்வோம். மனிதம் தழைக்க மனிதநேயத்தோடு செயல்படுவோம்" என்று பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x