Published : 20 Apr 2020 08:09 PM
Last Updated : 20 Apr 2020 08:09 PM

மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்குக் கரோனா தொற்று: பிரசவத்தின்போது எடுக்கப்பட்ட சோதனையில் தெரியவந்தது

வால்பாறையில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட பெண் தொடர்பான தகவல், நடுநிசியில் மைக் மூலம் அறிவிக்கப்பட்டதால் அந்நகரே பரபரப்பில் ஆழ்ந்தது. மாற்றுத்திறனாளியான அந்தப் பெண், சமீபத்தில்தான் ஒரு குழந்தைக்குத் தாயானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டம் வால்பாறை நகரின் சவரங்காடு எஸ்டேட் பகுதியில் வசித்துவரும் அந்தப் பெண், ஏப்ரல் 10-ம் தேதி அன்று பிரசவத்திற்காக வால்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம், ஏப்ரல் 11-ம் தேதி அன்று ஆண் குழந்தை பிறந்தது. ஏப்ரல் 18-ம் தேதி அன்று மாலை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அந்தப் பெண், ஆம்புலன்ஸ் மூலம் அட்டகட்டி சோதனைச் சாவடி வரை வந்துள்ளார்.

பின்னர் ஆம்னி வேன் மூலம் சவரங்காடு எஸ்டேட் குடியிருப்புக்குச் சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் என்பதால், அவருக்குக் கரோனா தொற்று இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட எஸ்டேட் தரப்பு, குடியிருப்பதற்கு அனுமதி மறுத்துள்ளது. இதனால் செய்வதறியாது தவித்த அப்பெண், வால்பாறை நகரம், காந்தி நகர் பகுதியில் உள்ள தன் சித்தி வீட்டிற்கு வந்து அடைக்கலம் புகுந்தார்.

இதனிடையே, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வந்தபோதே அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டிருந்தது. அவர் காந்தி நகர் பகுதிக்கு வந்துவிட்ட நிலையில், அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவலை வால்பாறை வட்டார மருத்துவ அலுவலர், தொலைபேசி வாயிலாகப் பெற்றிருக்கிறார். அவரது அறிவுறுத்தலின் பேரில், சனிக்கிழமை நள்ளிரவில் அப்பெண், அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை, அவரது சித்தி ஆகிய மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவையில் உள்ள கரோனா சிகிச்சை மையமான இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அப்பெண் தங்கியிருந்த வீடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக (No movement Zone) ஆக அறிவித்து வணிகம், போக்குவரத்து, மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடை செய்ய சுகாதாரத் துறை அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதன்படி, நள்ளிரவிலேயே, “வால்பாறை நகரில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் 144 தடை உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. யாரும் குறிப்பிட்ட பகுதியில் அத்தியாவசியமின்றி வெளியே வரக் கூடாது!” என மைக் மூலம் வாகனத்தில் அறிவிப்பும் வெளியிட்டனர் நகராட்சி அலுவலர்கள். சம்பந்தப்பட்ட பெண்ணின் பயணக்குறிப்புகள் தொடர்பான விவரங்களைச் சேகரிக்கும் பணியும் தொடங்கியிருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய வால்பாறை நகராட்சி ஆணையாளர், “சுகாதார அலுவலர்கள், மருத்துவர்கள், நகராட்சியினர், காவல் துறையினர் ஆகியோருக்கு உடனடியாகத் தகவல் தரப்பட்டு, தக்க சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் துறை அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

வால்பாறை பகுதியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x