Published : 20 Apr 2020 02:53 PM
Last Updated : 20 Apr 2020 02:53 PM
வீட்டிற்குள் நுழைய முயன்ற விரியன் பாம்பை கொன்று எஜமான் குடும்பத்தினரை காப்பாற்றிய நாய், பாம்பு கடித்ததால் விஷம் ஏறி ‘கோமா’ நிலைக்குச் சென்றது.
வாயில்லா ஜீவன்களின் பாசமும், விஸ்வாசமும் சில நேரங்களில் மனிதர்களை ஆச்சரியப்படுத்தும். அதனாலேயே, வாயில்லா ஜீவன்களை வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்க மனிதர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதிலும் நாய்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். வீட்டு காவலுக்கும், பொழுதுப்போக்கிற்காகவும் கெட்டிக்கார செல்லப்பிராணி. நாம் வீட்டை விட்டு அலுவலகத்திற்கு செல்லும் போதும், மீண்டும் வீட்டிற்கு திரும்பும்போதும் நாய்களின் நேசமும், அதனுடைய செல்ல விளையாட்டுகளும் மனிதர்களுடைய மன அழுத்தத்தை நீக்கும்.
அதிலும் சில நாய்கள் தனக்கு உணவூட்டி செல்லமாக வளர்க்கும் எஜமான்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற தன்னுடைய உயிரையே பனையம் வைக்கும்.
அப்படியொரு நெகிழ்ச்சி சம்பவம், மதுரையில் நேற்று நடந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த மகேஷ்வரன் (பெயர்மாற்றப்பட்டுள்ளது) வீட்டில் ‘புல்லிகுட்டா’ நாட்டு நாய் வளர்த்துள்ளார்.
தற்போது ‘கரோனா’ ஊரடங்கு என்பதால் இவரது குடும்பத்தினர் யாரும் வீட்டை விட்டு செல்லவில்லை. நேற்று இரவு நீண்ட நேரம் இவர்கள் நாயுடன் பொழுதுப்போக்கிவிட்டு தூங்க சென்றுவிட்டனர்.
நள்ளிரவு மகேஷ்வரன் வீட்டின் முற்றத்தில் 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு வந்துள்ளது. அதைப் பார்த்த நாய் குரைத்தது. ஆனால், பாம்பு திரும்பி போகாமல் வீட்டிற்குள் செல்ல முயற்சி செய்தது. கோபமடைந்த நாய், பாம்புடன் சண்டையிட்டுள்ளது. இதில், பாம்பும், நாயை தொடை, முகம் உள்ளிட்ட பல இடங்களில் கடித்துள்ளது. இதில், கடைசியில் நாய் பாம்பை கடித்துக் கொன்றாலும் அது மயக்கமடைந்து கிடந்தது. காலையில் எழுந்து பார்த்தவர்கள், நாய் மயக்கமடைந்து கிடப்பதும், அதன் அருகில் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி வீரியன் பாம்பு இறந்து கிடப்பதைப்பார்த்தும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக கால்நடை மருத்துவர் மெரில்ராஜ் என்பவரை வரவழைத்து வந்து நாய்க்கு சிகிச்சை அளித்தனர். நாய்க்கு, பாம்பு கடித்ததில் விஷம் அதன் தலைக்கு ஏறி கோமோ நிலைக்கு சென்றது தெரிய வந்தது. தற்போது உயிருக்குப் போராடும் நாய்க்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது.
கால்நடை மருத்துவர் மெரில் ராஜ் கூறுகையில், ‘‘பாம்பை கடித்த புல்லிக்குட்டாய் நாய், இந்தியாவில் பஞ்சாபிலம், பாகிஸ்தான் எல்லைப்பகுதியிலும் அதிகளவு வளர்க்கப்படுகிறது. இது இந்திய பாரம்பரிய வகையை சார்ந்த நாய்.
வீட்டுக் காவலுக்கு கெட்டிக்கார நாய். பாம்பு கடித்ததால் நாய் முகம் வீங்கி உள்ளது. அதன் சுவாசத்திற்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கோமா நிலையில் இருப்பதாலும் அதற்கு மனிதர்களை போல் வெண்டிலேட்டர் வைத்து செயற்கை சுவாசம் அளித்தால் மட்டுமே அந்த நாயைக் காப்பாற்ற முடியும்.
ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் தற்போது விஷயத்தை முறிக்க மருந்தை குளுக்கோஸ் வழியாக ஏற்றிக் கொண்டிருக்கிறாம். முடிந்தளவு சிகிச்சை அளிக்கிறாம். ஆனால், நாய் உயிர் பிழைப்பதற்கான சாத்டியக்கூறு குறைவுதான், ’’ என்றார்.
தன்னுடைய உயிரை பனையம் வைத்து எஜமான் குடும்பத்தினரை காப்பாற்றி கோமா நிலைக்குச் சென்ற நாயின் வீரச் செயலைப் பார்த்து அப்பகுதி மக்கள் வியந்துப்போய் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT