Last Updated : 20 Apr, 2020 02:18 PM

 

Published : 20 Apr 2020 02:18 PM
Last Updated : 20 Apr 2020 02:18 PM

குமரியில் வில்லிசை பாடி கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருநங்கை கவுன்சிலர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வில்லிசை பாட்டு பாடி தொகுதி மக்களிடையே திருநங்கை கவுன்சிலர் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அப்போது, தனித்திருந்தால் மட்டுமே வாழ்க்கை நமதாகும் என்பதை வலியுறுத்துகிறார்

கரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் அரசு தரப்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கிற்கு மத்தியில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் திருநங்கை ஒருவர் வில்லிசை மூலம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வு அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

நாகர்கோவில் ஒழுகினசேரியைச் சேர்ந்தவர் சந்தியாதேவி(37). திருநங்கையான இவர் தற்போது தோவாளையில் வசித்து வருகிறார். இவர் முதல் திருநங்கை வில்லிசை கலைஞர் என்ற பெருமை பெற்றவர்.

வில்லிசையின் பிறப்பிடமான கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள கோயில்கள், மற்றும் கலாச்சார விழாக்களில் சந்தியாதேவி வில்லிசை நடத்தியுள்ளார்.

பொதுச்சேவை, மற்றும் மக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் இவர் ஆர்வம் காட்டிவந்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தோவாளை ஊராட்சி 4-வது வார்டில் போட்டியிடுமாறு அப்பகுதி மக்கள் சந்தியாதேவியிடம் வலியுறுத்தினர்.

இதனால் போட்டியிட்ட அவர் வெற்றிபெற்று கவுன்சிலராகி மக்கள் சேவை ஆற்றி வருகிறார்.

தற்போது கரோனா பாதிப்பால் வெளியே செல்ல முடியாத நிலையில் சமூக இடைவெளி விட்டு தோவாளை 4வது வார்டு பகுதி மக்கள் மத்தியில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

சரியான புரிதல் இன்றி சுற்றி திரியும் கிராம பெண்களிடம் தனித்திருப்பதின் அவசியத்தையும், முகக்கவசம் அணிவதையும், கைகளை சுத்தம் செய்வது குறித்தும் எடுத்து கூறி வருகிறார்.

மேலும் அங்குள்ள கோயில்களில் சமூக இடைவெளியுடன் தனது வில்லிசை குழுவுடன் அமர்ந்து கரோனா விழிப்புணர்வு பாடலை பாடிவருகிறார். இதை அங்குள்ள மக்கள் தள்ளிநின்றவாறு கேட்கின்றனர். வில்லிசை கேட்க வருவோரையும் முகக்கவசம் அணிந்த பின்னரே அனுமதிக்கிறார்.

அரசு மேற்கொள்ளும் விழிப்புணர்வை திருநங்கை கவுன்சிலர் ஒருவர் ஏற்படுத்தி வருவதை அறிந்த சுகாதாரத்துறையினர், மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் சந்தியாதேவிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்து தமிழ் திசையிடம் சந்தியாதேவி கூறுகையில்; நான் 23 வருடமாக வில்லிசை குழு நடத்தி வருகிறேன். கோயில்களில் பணத்திற்காக மட்டும் வில்லுப்பாட்டு பாடாமல், என்னால் முடிந்தவரை சமூகத்திற்கு பயனுள்ள விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறேன்.

தோவாளை ஊராட்சியில் போட்டியிட செய்து கவுன்சிலராக்கினர். தற்போது கரோனா என்ற உயிர்கொல்லி நோய் பரவிவரும் நிலையில், அந்நோய் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் என்னால் முடிந்த வகையில் வில்லுப்பாட்டு பாடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

தனித்திருப்பதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும், முககவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்திருப்பது, கூட்டம் கூடாமலிருப்பது போன்றவற்றை வலியுறுத்தி நானே எழுதிய பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். தனித்திருந்தால் மட்டுமே வாழ்வு நமதாகும் என்பதை வலியுறுத்துகிறேன். தொடர்ந்து பிற பகுதி மக்களுக்கும் வில்லு பாட்டு மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளேன். இதன் மூலம் எனக்கு மனநிம்மதி கிடைக்கிறது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x