Published : 20 Apr 2020 01:44 PM
Last Updated : 20 Apr 2020 01:44 PM
மதுரை மாநகராட்சியில் உள்ள 12 அம்மா உணவகங்களிலும் இன்று முதல் மூன்று வேளைகளிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும், இதற்கான செலவை மாநகர் அதிமுக ஏற்றுக் கொள்வதாகவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிக்காக மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக வாங்கப்பட்டுள்ள 100 பேட்டரி மூலம் இயங்கும் கிருமி நாசினி கைத்தெளிப்பான் இயந்திரங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் தலைமை வகித்தார்.
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சிக்கு சொந்தமான 100 இலகுரக வாகனங்கள் மூலம் 100 வார்டுகளிலும் வீடு வீடாக நாள் ஒன்றுக்கு 10,000 எண்ணம் காய்கறி தொகுப்புகள் மற்றும் பழவகை தொகுப்புகள் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், பள்ளி, கல்லூரி மைதானங்கள் என 35 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் காய்கறி விலைகள் கட்டுப்பாட்டில் உள்ளது. தனிமைப்படுத்தப் பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் பரப்புரையாளர் மற்றும் மருத்துவ அலுவலர்களால் அவர்களின் உடல்நிலை, காய்ச்சல், சளி மற்றும் இதர அறிகுறிகள் குறித்து அறிந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
அதனால், மதுரையில் கரோனா கட்டுக்குள் இருக்கிறது. மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 17 நபர்களில் 5 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு நபர் இறந்து விட்டார். மீதமுள்ள 11 நபர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனியார் கடைகளில் வாங்குவதை விட 10 சதவீதம் குறைவான விலையில் கூட்டுறவுக் கடைகளிலும், நியாய விலைக் கடைகளிலும் உணவுப்பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 12 அம்மா உணவகங்களிலும் இன்று 20ம் தேதி முதல் 03.05.2020 வரை மூன்று வேளை உணவும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நகரப்பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர்கள் பழனிச்சாமி,பிரேம்குமார், விஜயா, சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT