Published : 19 Apr 2020 09:33 PM
Last Updated : 19 Apr 2020 09:33 PM
தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஏழைக் குடும்பங்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கினர்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழலில் ஏழை மக்களுக்கு உதவும் விதமாக புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியியைச் சேர்ந்த பேராசிரியர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
கல்லூரியில் உள்ள 17 துறைகளைச் சேர்ந்த 120 பேராசிரியர்கள் மற்றும் 30 அலுவலகப் பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து தங்களின் சொந்தப் பணத்தின் பங்களிப்புடன் உதவிகள் செய்து வருகின்றனர். குறிப்பாக முதியோருக்கு அவர்களின் இல்லம் தேடிச் சென்று உதவி செய்வது, ஏழைக் குடும்பங்கள், ஏழை மாணவர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவது, தெரு விலங்குகளுக்கு உணவு அளிப்பது போன்ற செயல்களில் இறங்கியுள்ளனர்.
இதன் முதல் கட்டமாக கடந்த இரண்டு நாட்களாக 150 ஏழைக் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், சுகாதாரப்பணியாளர்கள் 250 பேருக்கு துண்டு, சோப்பு, கிருமிநாசினி போன்ற பொருட்களை வழங்கினர். மேலும் உணவின்றி தெருக்களில் சுற்றும் நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு அளிக்க 175 கிலோ அரிசி தன்னார்வலர்கள் மூலம் உணவளிக்க வழங்கினர்.
தொடர்ந்து கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்தும் வருகின்றனர். இந்தப் பணியை அவர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கல்லூரிப் பேராசிரியர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘கரோனா தொற்றினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களால் முடிந்ததை ஏழை மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணி, கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ் தலைமையில் இதற்கான பணியில் இறங்கியுள்ளோம். நாங்களே எங்களுடைய சொந்த செலவில் செய்து வருகிறோம்’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT