Published : 19 Apr 2020 07:36 PM
Last Updated : 19 Apr 2020 07:36 PM
கரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்து வீடு திரும்பியபோது அளிக்கப்பட்ட வரவேற்பு காரணமாக வழக்கில் சிக்கியுள்ளார்.
நாகை மாவட்டம் சீர்காழி சபாநாயகர் தெருவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 19 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பூரண குணமடைந்து சீர்காழியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று திரும்பினார்.
வீட்டிற்குத் திரும்பிய அவரை ஜமாத்தார்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். வரவேற்பு அளித்த வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பபிதா இதுகுறித்து சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரில், "ஊரடங்கை மதிக்காமல் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் கரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் ஊர்வலமாகச் சென்று வரவேற்பு அளித்துள்ளதாகவும், எனவே நோயிலிருந்து மீண்டு வந்தவர் உட்பட 15 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து குணமடைந்த நபர் உள்ளிட்ட 15 பேர் மீது சீர்காழி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT