Published : 19 Apr 2020 07:12 PM
Last Updated : 19 Apr 2020 07:12 PM
‘கரோனா’ஊரடங்கால் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு கிராமப் பொதுநிதியை பகிர்ந்தளித்து மதுரை கிராமம் மனிதநேயத்திற்கும், ‘கரோனா’நிவாரணத்திற்கும் உதவுவதிலும் முன்னோடியாகத் திகழ்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திருமாணிக்கம் ஊராட்சியைச் சேர்ந்த கிராமம் தி.மீனாட்சிபுரம். இந்த கிராமத்தில் 250 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள், கட்டுமானத் தொழில்களை நம்பி மக்கள் வாழ்கின்றனர்.
தற்போது ‘கரோனா’பேரிடரால் இந்த கிராம மக்கள் வேலையில்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடச் சாப்பாட்டிற்கே சிரமப்படுகின்றனர். இந்தக் கிராம மக்களின் நிலையை அறிந்த இந்த ஊர் முக்கியப் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் ஒன்று கூடி ஆலோசித்தனர்.
பங்குனி மாதம் நடக்கும் திருவிழாவிற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த கிராம மக்களிடம் வசூலிக்கும் வரிப் பணத்தில் திருவிழா செலவு போக மீதமுள்ள தொகையை கிராமப் பொதுநிதியாக சேமித்து வந்துள்ளனர். இந்த நிதி தற்போது சுமார் ரூ. 7 லட்சம் இருப்பு இருந்தது.
இந்த பணத்தில் இருந்து ரூ. 25 ஆயிரம் ரூபாயை மட்டும் இருப்புத் தொகையாக வைத்துக் கொண்டு மீதமுள்ள ரூ.6 லட்சத்து 75 ஆயிரத்தை அங்குள்ள மொத்த குடும்பமான 225 குடும்பங்களுக்கு தலா 3000 ரூபாயை வீதம் கரோனா பேரிடர் நிவாரணமாக பிரித்துக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அந்த நிதியை மக்களுக்குப் பகிர்ந்தளித்தது அக்கிராம மக்களிடையே மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஊரைச் சேர்ந்த அழகுமணி கூறுகையில், ‘‘அரசு கரோனா பரவும் என்று மக்களை வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று சொல்லிவிட்டது. ரேஷன் கார்டுக்கு அரசு கொடுத்த ரூ.1000 நிவாரணம் ஒரு சில நாளிலே தீர்ந்துவிட்டது. அடுத்து செலவுக்கு என்ன செய்வது என்று கலங்கிப்போய் நின்றனர். அதனால், ஊர் பெரியவர்கள் நாங்கள் எல்லோரும் கூடி முதலில் வயிற்றுப் பசியைப் பார்ப்போம், அதற்குப் பிறகு திருவிழாவை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து, ஊர் பொது நிதியை எடுத்து ஒரு வீட்டிற்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT