Last Updated : 19 Apr, 2020 07:48 AM

 

Published : 19 Apr 2020 07:48 AM
Last Updated : 19 Apr 2020 07:48 AM

ரஜினி பேசிய ‘உள்ளே போ’ என்ற வசன தலைப்பில் வெளிவந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியின் கரோனா விழிப்புணர்வு இசை ஆல்பத்துக்கு அமோக வரவேற்பு

சென்னை

பாட்ஷா படத்தில் நடிகர் ரஜினி பேசிய ‘உள்ளே போ’ என்ற வசனத்தின் பெயரில், பெண் ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு நடனத்தில் வெளிவந்துள்ள கரோனா விழிப்புணர்வு ஆல்பம் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த இசை ஆல்பம் குறித்து, கவிதா ராமு, ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:

கரோனா குறித்து மனரீதியாக கவலை அடைந்திருந்தேன். அப்போது, பிரபல இசை யமைப்பாளர் தாஜ்நூர், கரோனா குறித்து ‘உள்ளே போ’ என்ற தலைப்பில் தயாரித்துள்ள ஒரு விழிப்புணர்வு ஆல்பத்துக்கு நடனம் ஆட முடியுமா எனக் கேட்டார். அடிப்படையிலேயே, நான் ஒரு நாட்டிய கலைஞர். எனவே, தாஜ்நூர் தெரிவித்ததும் இந்த இசை ஆல்பத்தில் உடனடியாக நடனமாடி நடிக்க சம்மதித்தேன். இந்த நடனம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தஆல்பத்தைத் தயாரித்த இசையமைப்பாளர் தாஜ்நூர் கூறும்போது, “பாட்ஷா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘உள்ளே போ’ என்ற ஒரு வசனம் பேசுவார். அந்த வசனத்தையே மையக் கருத்தாக வைத்து கரோனா விழிப்புணர்வு பாடலை எழுத தீர்மானித்தேன். இதற்காக, கவிஞர் இனியவன் பாடலை எழுதிக் கொடுத்தார்.

பாடகர்கள் வேல்முருகன், தீபக் மற்றும் ஷிவானி ஆகியோர் பாடலைப் பாடினர். இப்பாடலுக்கு ஒரு பிரபல நடனக் கலைஞரை நடிக்க வைக்க தீர்மானித்தேன். அப்போதுதான், பெண் ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமுவைப் பற்றி நினைத்தேன். எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்ததும், உடனே அவர் நடிக்க சம்மதம் தெரிவித்தார். பாடலுக்கு ஏற்ற வகையில் கவிதா ராமு அற்புதமாக நடனமாடினார்.

இந்த இசை ஆல்பத்தை யூடியூப்பில் பதிவிட்டுள்ளேன். ஏராளமானோர் இதைப் பார்த்து ரசித்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x