Published : 18 Apr 2020 06:53 PM
Last Updated : 18 Apr 2020 06:53 PM
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கரோனா நோயாளி உள்ளிட்ட 3 பேர் மீது ராமநாதபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 42 வயது ஆண் உள்ளிட்ட 3 ஆண்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் சிகிச்சைக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கரோனால் தொற்றால் பாதிக்கப்பட்ட மண்டபத்தைச் சேர்ந்தவர் தனது நண்பர் ஒருவருடன் கைபேசியில், தான் நலமாக உள்ளதாகவும், சுகாதாரத்துறையினர் பொய்யாக கரோனா உள்ளதாக கூறி வதந்தி பரப்பி மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர் என பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் இவர் உள்ளிட்ட 3 பேர் மீது ராமநாதபுரம் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரே தனது நண்பருடன் அவதூறாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.
அதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர், அவருடன் பேசிய ராஜா, சமூக வலைதளங்களில் பரப்பிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல்லா ஆகிய 3 பேர் மீதும், கிருமியை பரப்பும் வகையில் செயல்படுதல், தனிமைப்படுத்துதலை மீறுதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் தொற்று நோய் பரவும் இக்கால கட்டத்தில் இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வழக்குகள்:
இதுவரை மாவட்டத்தில் 144 தடையுத்தரவை மீறியதாக 2003 வழக்குகள் பதியப்பட்டு, 2,500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளனர். 144 தடையுத்தரவு மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக 2,870 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 512 வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் மதுவிலக்கு தொடர்பாக 220 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 304 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 1070 லிட்டர் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள், 26 லிட்டர் பீர், கள் 2000 லிட்டர், கள்ளச்சாராயம் 130 லிட்டர் மற்றும் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என.தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT