Published : 18 Apr 2020 06:10 PM
Last Updated : 18 Apr 2020 06:10 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் நிவாரணம் வழங்கும் விழாவில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் சர்ச்சை எழுந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பலர் வேலையின்றி உணவுக்காக சிரமப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இதற்கிடையில் சமூகஇடைவெளியை கடைபிடிக்கவில்லை என கூறி, தன்னார்வலர்கள் அரசு அதிகாரிகள் அனுமதியின்றி நிவாரண உதவிகளை வழங்க கூடாது என அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில், தன்னார்வலர்கள் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு நிவாரண உதவிகளை வழங்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் தன்னார்வலர்கள் உணவின்றி தவிப்போருக்கு உதவி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி எஸ்எம்எஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சார்பில் 5 கிலோ அரிசி பை வழங்குவதாக தகவல் பரவியது. இதையடுத்து காலை 8 மணியில் இருந்தே ஏராளமானோர் பள்ளியில் காத்திருந்தனர்.
பகல் 1 மணிக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் பாஸ்கரன், ஆட்சியர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தனர். ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், அவர்களை போலீஸார் தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பலர் கீழே விழுந்தனர்.
அரிசி பையை வாங்குவதற்காக ஏராளமானோர் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்தனர். மேலும் ஆயிரம் பேருக்கு மட்டுமே அரிசி வழங்க ஏற்பாடு செய்தநிலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அமைச்சர் விழாவில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT