Published : 18 Apr 2020 05:21 PM
Last Updated : 18 Apr 2020 05:21 PM

ரேபிட் டெஸ்ட் ‘கிட்’ மூலம் யார் யாருக்கு ‘கரோனா’ பரிசோதனை?

மதுரை

தமிழகத்தில் முதற்கட்டமாக கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்ட ‘சீல்’ வைத்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் ‘கரோனா’ பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 19 இடங்களில் கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. தென் தமிழகத்தில் மதுரை, தேனி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இந்த பரிசோதனை மையங்கள் உள்ளன.

இந்தப் பரிசோதனை மையங்கள் மூலம் தினமும் 700 முதல் 900 பரிசோதனைகள் மட்டுமே செய்ய முடிகிறது. கூடுதல் பரிசோதனை மையங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் இருந்து விரைவான ‘கரோனா’ பரிசோதனைக்காக 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் தமிழகம் வந்தது. மாநில சுகாதாரத்துறை, அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் நேற்றைய தினமே இந்த ரேபிட் டெஸ்ட் ‘கிட்’களை விநியோகம் செய்தது. இதில், ‘ரெட் அலர்ட்’ பட்டியலில் இருக்கும் மாவட்டங்களுக்கு கூடுதலாக இந்த டெஸ்ட் கிட்கள் வழங்கப்பட்டுள்ளன. மதுரைக்கு நேற்று இந்த ரேபிட் டெஸ்ட் ‘கிட்’டுகள் வந்தன.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் கரோனா பாதித்தோரை இதுவரை பிசிஆர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது.

பிசிஆர் எனப்படும் கிட் மூலம் பரிசோதனை முடிவுகள் வர நாள் கணக்கில் ஆகிறது. அதனால், அறிகுறி தெரியாத வீடுகளில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் இந்த நோய் சமூகப்பரவல் நிலையை அடையாமல் இருக்க ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் விரைவு சோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இதில், பரிசோதனை முடிவுகள் அரை மணி நேரத்தில் முடிவுகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு நிறைய பேரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்யலாம். ஆனால், இது மட்டுமே இறுதியான கரோனா பரிசோதனை முடிவு இல்லை.

ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மீண்டும் பிசிஆர் எனப்படும் கிட் மூலம் பரிசோதனை செய்யப்படும். இந்த ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் இன்று முதல் மதுரையில் ‘கரோனா’ பரிசோதனை தொடங்கிவிடும்.

முதற்கட்டமாக ‘கரோனா’ பாதித்த தடை செய்யப்பட்ட பகுதிகளில் இந்த ரேபிட் டெஸ்ட் ‘கிட்’ மூலம் பரிசோதனைகளை நடத்த உள்ளோம். அதன்பிறகுஇரண்டாம் கட்டமாகவே மற்ற பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்துள்ளோம், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x