Published : 18 Apr 2020 12:34 PM
Last Updated : 18 Apr 2020 12:34 PM
கரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட தமிழக அரசு முன் வர வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஏப்.18) வெளியிட்ட அறிக்கையில், "சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள ஒரு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இம்மருத்துவமனையில் வார்டு பாய், மருந்துச்சீட்டு வழங்குவோர், செக்யூரிட்டி, தூய்மைப்பணி, நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வோர் உள்ளிட்ட வேலைகளிலுள்ள 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் தற்போது கரோனா நோய் எதிர்ப்புப்பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக அரசுடனான ஒப்பந்தத்தின்படி இவர்களை வேலைக்கு அமர்த்திய தனியார் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்திற்கான ஊதியத்தை இன்னும் இவர்களுக்கு வழங்கவில்லை என செய்தி வெளியாகியிருக்கிறது.
ஊரடங்கு நேரத்தில் தனியார் நிறுவனங்கள் எதுவும் ஊழியர்களிடம் ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது என தமிழக அரசு கூறியுள்ள நிலையில், அரசு மருத்துவமனையிலேயே ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே இவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவர்களைப் போன்றே தமிழகம் முழுவதும் அரசுப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் சரியாக வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கப்பதுடன், கரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட தமிழக அரசு முன் வர வேண்டும்" என டிவிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT