Published : 18 Apr 2020 11:56 AM
Last Updated : 18 Apr 2020 11:56 AM
கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்திற்கு நாளை முதல் காலை 7.30 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் காய்கனி வாங்க வரும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்தில் மொத்த மற்றும் சிறு வியாபாரிகள் பின்பற்றவேண்டிய நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மண்டல கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு கண்காணிப்பு குழு அலுவலர்கள் ராஜேந்திர குமார், மற்றும்.அபாஷ் குமார், ஆகியோர் தலைமையில் 17.04.2020 அன்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயம்பேட்டில் அமைந்துள்ள காய்கனி மற்றும் மலர்கள் அங்காடி வளாகப் பகுதி பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஏற்கனவே மொத்த வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு மட்டுமே கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் காய்கனி மற்றும் மலர்களை வாங்கிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளிலேயே காய்கனி வாங்க அறிவுறுத்தப்பட்டு கோயம்பேடு மார்க்கெட் வளாகப் பகுதியில் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட் வளாகப் பகுதிக்கு வருகை தரும் வியாபாரிகள் கடைபிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கூட்டங்கள் நடத்தி ஏற்கனவே எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் நோய் தொற்று தடுக்கும் வகையில் காய்கனி அங்காடிக்கு வருகை புரியும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மார்க்கெட் பகுதிகளில் கிருமிநாசினி கொண்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மார்க்கெட் வளாக பகுதிக்கு காய்கனி மற்றும் மலர்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் வருகை தரும் மொத்த மற்றும் சிறு வியாபாரிகள் நாளை முதல் காலை 4.00 மணி முதல் காலை 7.30 மணிக்குள் தங்களுடைய வாகனங்களில் வந்து காய்கனி மற்றும் மலர்களை வாங்கி செல்ல வேண்டும்.
கோயம்பேடு காய்கறி அங்காடி வளாகத்தில் காலை 7.30 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் வந்து காய்கனி, மலர்கள் மற்றும் இதர பொருட்களை வாங்க வரும் நபர்கள் எவருக்கும் அனுமதி இல்லை. இதை மீறி மார்க்கெட் வளாக பகுதிக்கு வருபவர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மூன்று மற்றும் நான்கு சக்கர சரக்கு வாகனங்களை கொண்டு காய்கறிகளை வாங்க வருகைதரும் வியாபாரிகளுக்கு இந்த நேரக்கட்டுப்பாடு இல்லை.
அவ்வாறு மார்க்கெட் வளாக பகுதிக்கு வருகை தரும் வியாபாரிகள் அனைவரும் கண்டிப்பாக முக மூடி அணிந்து வரவேண்டும். வளாகத்திற்குள் உள்ள அங்காடிகளுக்கு செல்லும் பொழுது கைகளை சுத்தமாக கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு கழுவ வேண்டும். அங்காடிகளுக்கு வரும் சிறு வியாபாரிகள் ஆங்காங்கே கூட்டம் கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியுடன் நிற்பதை மொத்த வியாபாரிகள் உறுதிசெய்ய வேண்டும்”.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கனி அங்காடி பகுதியில் சுமார் 10,000 மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் உடல் பரிசோதனைகள் மேற்கொள்ள இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர்-செயலர் கார்த்திகேயன், காவல்துறை ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT