Published : 18 Apr 2020 07:17 AM
Last Updated : 18 Apr 2020 07:17 AM
ஊரடங்கு உத்தரவால் பணியின்றித் தவிக்கும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் சிவப்பு நிற ரேஷன் கார்டு களுக்கு 3 மாத காலத்துக்கு 15 கிலோ அரிசி, 3 கிலோ பருப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.
புதுச்சேரியில் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட வில்லை. தமிழகம், கேரளம், ஆந்திராவில் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம், அங்கு தொடர்ந்து செயல்படும் பொது விநியோக கடைகளே.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் மொத்தம் 507 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் பாப்ஸ்கோவின் கீழ் 47-ம், ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் 26 கடைகளும் நடத்தப்படுகின்றன. மீதியுள்ள கடைகள் கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 800 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
புதுச்சேரியில் ரேஷனில் இலவச அரிசி மட்டுமே விநியோகிக்கப்பட்டு வந்தது. தமிழகத்தைப் போல இதர பொருட்கள் தரப்படுவதில்லை. கடந்த சில வருடங்களாக அரிசியும் சரிவர விநியோகிக்கப்படவில்லை. ரேஷன் கடை ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக ஊதியமும் தரப்பட வில்லை. இதற்கிடையே, ‘அரிசிக்குப் பதில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம்’ என்ற திட்டத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொண்டுவந்தார். அப்படியும், இலவச அரிசிக்கான 22 மாத பணம், பெரும்பான்மையான பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.
இந்தச் சிக்கல்களுக்கு நடுவில், தற்போது மத்திய அரசு வழங்கியிருக்கும் அரிசியும், பருப்பும் முழுமையாக அனைத்து தொகுதி களுக்கும் சென்றடைய வில்லை. இதுதொடர்பாக ஆளும் தரப்பும், துணைநிலை ஆளுநரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஏறக்குறைய 30 மாதங்களாக ஊதியம் தரப்படாததால் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படாமல், பொதுப்பணித் துறை பல்நோக்கு ஊழியர்களைக் கொண்டு அந்தந்தப் பகுதிகளில் அரிசியும், பருப்பும் விநியோகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் கூறியபோது, “பொதுப் பணித் துறை ஊழியர்களைக் கொண்டு அரிசி, பருப்பு விநியோகிப்பதால் விநியோகத்தில் தாமதம், சிக்கல் ஏற்பட்டிருக்கிறது” என்றனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி நியாய விலைக்கடை ஊழியர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் நடராஜன் கூறியபோது, “கிட்டத்தட்ட இரண்டே கால் ஆண்டுகளாக ஊதியம் தரவில்லை. அதைப் பற்றி எதுவும் பேசாமல், தற்போதைய இக்கட்டான சூழலை கருத்தில்கொண்டு ரேஷன் கடைகளைத் திறந்து, விநியோகம் செய்ய முன் வந்தோம். ஆனால், அரசு அதிகாரிகள் அதைப் பொருட்படுத்தவில்லை. இது தவறானது. முக்கிய சூழலில் ரேஷன் கடைகள் இருந்தால்தான் அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க முடியும். இனியாவது அரசு இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT