Published : 17 Apr 2020 09:16 PM
Last Updated : 17 Apr 2020 09:16 PM

கரோனா பேரிடர் தடுப்பு ஒருங்கிணைப்புக் குழுக்களை மாநில, மாவட்ட அளவில் அமைக்க வேண்டும்: தேவநேயன் வலியுறுத்தல்

சென்னை

மாநில, மாவட்ட அளவில் கரோனா பேரிடர் தடுப்பு ஒருங்கிணைப்புக் குழுக்களை தமிழக அரசு உடனடியாக உருவாக்க வேண்டும் என்று சமூகச் செயற்பாட்டாளர் தேவநேயன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தோழமை தொண்டு நிறுவனத்தின் இயக்குநரும் குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளருமாகிய தேவநேயன் கூறியதாவது:

''தமிழ்நாடு என்பது தொடர்ந்து பல்வேறு விதமான இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்து வருகிற மாநிலமாகும். சுனாமி முதல் ஒக்கி புயல் வரை பல்வேறு இடர்களை எதிர்கொண்டு சமாளித்த மாநிலமாகும். ஒவ்வொரு பேரிடரும் பல்வேறு விதமான படிப்பினைகளை நமக்கு வழங்கியுள்ளது.
இதில் முதன்மையான படிப்பினை என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள், மற்றும் அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியாளருடன் இணைத்து பேரிடர் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி வெற்றிகரமாக பல்வேறு பணிகளைச் செய்தது. இதைப் போலவே மாநில அளவிலும் குழுக்களை உருவாக்கிய வரலாறு உண்டு.

இன்று நாம் எதிர்கொண்டுள்ள கரோனா பிரச்சினை மிகப்பெரிய பேரிடராக மாறியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இதுவரை மாவட்ட அளவிலும் , மாநில அளவிலும் ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்களைக் கொண்டு ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை உடனடியாக உருவாக்க வேண்டும்.

இதைப் போலவே மாநில அளவில் சமூக அமைப்புகள் கார்ப்பரேட் கம்பெனி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்களைக் கொண்டு மாநிலக் குழு ஒன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். இந்த ஒருங்கிணைப்புக் குழு என்பது நிவாரணப் பொருட்களை சரியான நேரத்தில் சரியான நபர்களுக்குக் கொண்டு செல்வதற்கும் நிவாரணப் பொருட்களை பல்வேறு நபர்களிடம் பெறுவதற்கும் பிரித்துக் கொடுப்பதற்கும் இக்குழு பல்வேறு பணிகளை முன்னின்று செய்ய முடியும்..

இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவில், மாநில அளவில் உரிய அங்கீகாரத்தையும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம், போக்குவரத்து பிற வசதிகளை ஏற்பாடு செய்தால் மக்கள் விரைவில் நிவாரணப் பொருள்களை பெறுவார்கள். எனவே தமிழ்நாடு அரசு மாவட்ட மாநில கரோனா பேரிடர் தடுப்பு ஒருங்கிணைப்புக் குழுக்களை உடனடியாக உருவாக்க வேண்டும்''.

இவ்வாறு தேவநேயன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x