Published : 17 Apr 2020 09:11 PM
Last Updated : 17 Apr 2020 09:11 PM

விளிம்பு நிலையில் உள்ள மலைவாழ் மக்களுக்கு உதவி செய்யுங்கள்: மலைவாழ் மக்கள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை

தமிழக அரசு வழங்கியுள்ள 20 கிலோ அரிசி 5 பேர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு வேளைக்கு ஒரு கிலோ அரிசி என்றால் கூட ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மட்டுமே இவர்களுக்கான உணவாகும். மீதம் 11 நாட்கள், எந்த அரிசியை இவர்கள் உண்பது என்கிற நிலையை உணர்ந்து முதல்வர் உதவிட வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் சங்க தலைவர் டில்லிபாபு முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“தமிழக முதல்வருக்கு எனது அன்பான வணக்கம்.

கரானா என்ற வைரஸ் தொற்று உலக நாடுகளையே உலுக்கி போட்டுள்ளது. தமிழகத்தில் இத்தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்தி உரிய சிகிச்சை அளித்திட தங்களது அரசின் சீரிய முயற்சி பலப்படுத்த வேண்டியுள்ளது.

இருப்பினும், இரத்த பரிசோதனையும், பிசிஆர் டெஸ்டும், தனிமைப்படுத்தப்பட்டோர்களுக்கும் உடனடியாக பரிசோதனை செய்து உரிய சிகிச்சையை அவசர பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதை தாங்கள் அறிவீர்கள். அதற்கான பணியை தற்போது துவக்கியுள்ளீர்கள்.

கரானா தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்திட மத்திய – மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவினை இத்தேசமே கடைபிடித்து வருகின்றது. இதன் மூலம் இந்நோய் பரவுவதை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுத்து நிறுத்திடவும் பெரும் பங்காற்றியுள்ளது.

இச்சூழலில் மாநில அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்திற்கான மார்ச்-23 முதல் ஏப்ரல் 14 வரைக்கான நிவாரணம் ரூ.1000ம் மற்றும் குடும்ப அட்டைகளுக்கு 20 கிலோ அரிசி, 1கிலோ பருப்பு, 1 கிலோ பாமாயில், 1 கிலோ சர்க்கரை வினியோகிப்பது என்பது தமிழகத்தில் பழங்குடி மக்கள் வாழும் பெரும்பான்மையான பகுதிகளுக்கு சுமார் 40 சதமான மக்களுக்கு உணவுப் பொருட்கள் சென்றடையவில்லை.

இருப்பினும் 21 நாட்களான ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவடைகிறது என்ற நம்பிக்கையால் பல்வேறு பசி, பட்டினிகளுக்கிடையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு, கால் வயிறு, அரை வயிற்று கஞ்சி குடித்து தான் இன்றைக்கும் தமிழகத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வாழ்க்கையை கடந்து வருகின்றனர்.

தமிழக அரசு வழங்கியுள்ள 20 கிலோ அரிசி 5 பேர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு வேளைக்கு ஒரு கிலோ அரிசி என்றால் கூட ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மட்டுமே இவர்களுக்கான உணவாகும். மீதம் 11 நாட்கள், எந்த அரிசியை இவர்கள் உண்பது என்பது அம்மக்களின் மத்தியில் எழும் வலுவான கேள்வியாகும்.

கிராமப்புறங்களில் பிற சமூகத்தினரைப் போல் பழங்குடி இன மக்களது வாழ்க்கையை ஒப்பிட முடியாது என்பதை முதல்வர் நன்கு அறிந்திருப்பீர். இவர்களுக்கு பிற சமூகத்தினர் கடன் கொடுப்பதோ அல்லது முன்பணம் தருவதோ மிக சொற்பமே, இவர்களுடைய அன்றாட உழைப்பிலே வாழ்ந்து வருபவர்களாகவர், எனவே அரசின் திட்டங்கள், நிவாரணம், உணவு பொருட்கள் முழுமையாக அம்மக்களுக்கு சென்றடைய வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறேன்.

நேற்றைய செய்தி தாளில் கூட (16.4.2020) ஊட்டியில் பழங்குடி மக்களுக்கு வழங்கிட வேண்டிய அரிசி, பணம் வழங்காததால் கூடலூர் செருமுள்ளி ரேசன் கடை ஊழிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் வாழும் இருளர் இன பழங்குடி மக்களுக்கு 35 கிலோ அரிசி வழங்கியதில் கொரானா காலத்தில் 20 கிலோ அரிசியாக குறைத்து வழங்கியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

உதாராணத்திற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் திருக்கண்டலம், செருக்கனூர், பங்களாமேடு, பூனிமாங்காடு, காஞ்சிப்பாடி, தாழவேடு, எஸ்.வி.ஜி புரம், தாமரைக்குளம் போன்ற கிராமங்களில் வாழும் இருளர் இன மக்கள் ஒருநாளைக்கு ஒரு வேலை அல்லது இரண்டு வேளை கஞ்சி தான் இன்றைக்கும் உண்டு உயிர் வாழ்கின்றனர்.

இச்சம்பவம் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்டத்தில் வாழும் 1053 பழங்குடியினர் குடும்பங்களுக்கு கிராம வாரியாக மதிப்புமிக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் (மற்றும்) முதன்மைச் செயலாளர், ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறைக்கு கூடுதலாக உணவுப்பொருட்களையும், நிவாரணமும் அளித்திட மனு அனுப்பியிருந்தேன்.

சமீபத்தில் பழங்குடியினர் நலத்துறை இயக்ககம், பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு தலா 1000 ரூபாய் வீதம் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இந்நலவாரியத்தின் செயல்பாடு கடந்த நான்கைந்து ஆண்டு காலமாக பெரும்பான்மையான பழங்குடி மக்கள் புதிய நலவாரிய அட்டை பெறுவதும், உதவிகள் பெறுவதும் என்ற விழிப்புணர்வை பெரும்பான்மையான பழங்குடியினர் மத்தியில் கொண்டு செல்லவில்லை,

இதனால் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் நலவாரிய அட்டை பெற இயலாமல் உள்ளனர். இனச்சான்று பெற்றுள்ள பழங்குடியினர் குடும்பங்களுக்கும் (நலவாரிய அட்டை இல்லாத) இக்கால நெருக்கடியான நேரத்தில், சிறப்பு நிகழ்வாக கருதி, அனைவருக்கும் அரசின் நிவாரணம் வழங்கிட வேண்டுகிறேன்.

அதே போல் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட போர்க்கால அடிப்படையில், பழங்குடியின மக்களுக்கு குடிநீர் வழங்கிடவும் உரிய கொரானா பரிசோதனை சம்மந்தப்பட்ட மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகளை நடமாடும் மருத்துவமனை முகாம் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

பழங்குடியின மக்களுக்கு குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கு இக்காலத்தில் அரசின் நிவாரணமும், ரேசன் பொருட்களையும் வழங்கிட முன்வர வேண்டுகிறேன். தமிழக முதல்வர், , பிரதமர் ஆகியோரின் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள அசாதாரணமான இச்சூழலில் குறிப்பாக பழங்குடி மக்கள் வாழும் அப்பகுதிகளுக்கு மே- 3ந் தேதி வரைக்கும் மக்கள் ஊரடங்கை கைபிடிக்க வேண்டியுள்ளதால் தமிழக முதல்வர் கீழ்கண்ட உடனடியாக கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

· தமிழகத்தில் வாழும் பழங்குடி மக்கள் குடும்பங்களுக்கு குடும்ப அட்டைக்கு 5000 ரூபாயும், 60 கிலோ அரிசி இதர உணவுப் பொருட்களை வழங்கிட வேண்டும்.

*குடும்ப அட்டை இல்லாத பழங்குடி குடும்பத்திற்கும் ஏற்கனவே வழங்கிய ரூ.1000 மற்றும் பிற பொருட்களை இத்துடன் வழங்கிட வேண்டும்

* நலவாரிய அட்டை இல்லாத பழங்குடி குடும்பங்களுக்கு சாதி சான்று இருந்தாலே போதுமானதாக கருதி நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் நிவாரண தொகை ரூ.1000 வழங்கிட வேண்டுகிறோம்.

* இப்பணிகளை விரைந்து செயல்பட பழங்குடி மக்கள் பல்வேறு அமைப்புகளை இணைத்து அரசே உயர் அதிகாரிகளின் மூலமாக இதனை முழுமையாக அமுல்படுத்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்டவைகளை மத்திய- மாநில அரசுகளின் பழங்குடியினருக்கான துணை திட்டங்களிலிருந்தும் இக்காலத்தில் இப்பணிகளுக்கு அவசரம், அவசியம் கருதி தமிழகத்தின் பழங்குடி மக்களின் வாழ்வினை பாதுகாத்திட வேண்டுகிறேன்”.

இவ்வாறு டில்லிபாபு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x