Published : 21 May 2014 04:05 PM
Last Updated : 21 May 2014 04:05 PM

இலங்கைத் தமிழர் பிரச்சினை: மோடி, ஜெயலலிதாவை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு விருப்பம்

இந்தியப் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரைச் சந்தித்துப் பேச, இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிப்பெற்ற நரேந்திர மோடிக்கும், தமிழகத்தில் அமோக வெற்றிப் பெற்ற அதிமுக பொதுச் செயலாளல் ஜெயலலிதாவிற்கும் யாழ்பாணத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதங்களில் கூறியிருப்பதாவது:

'இலங்கையில் போர் முடிவுற்றவுடன் அமைதி திரும்புவதற்கு பதிலாக, இலங்கைத் தமிழர்களின் இருப்பே நாளுக்குநாள் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசு தனது முழு அதிகாரத்தையும் ஆயுதப்படைகளையும் பயன்படுத்தி தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதுடன் அவர்களது வாழ்வாதாரத்தையும் பறித்தெடுக்கின்றது. இலங்கை அரசு தமிழர்களுக்கெதிராக நன்கு திட்டமிட்ட வகையில் மூர்க்கத்தனமான வன்முறைகளை அமுல்படுத்துகின்றது.

இலங்கையில் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அனைத்து வகைகளிலும் அச்சத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கூறிய விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு வசதியாக கூடிய விரைவில் தங்களின் பொன்னான நேரத்தின் ஒருபகுதியை எமக்காகவும் ஒதுக்கி எமது வேண்டுகோள்களைச் செவிமடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்' என்று நரேந்திர மோடி மற்றும் ஜெயலலிதாவிற்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இலங்கையின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அடுத்த வாரம் தமிழகம் வரவிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x