Published : 17 Apr 2020 07:40 PM
Last Updated : 17 Apr 2020 07:40 PM

ஒவ்வொரு கோடையிலும் அவலம்: குடிநீர் இன்றி கிணற்றில் இரவு பகலாகக் காத்திருக்கும் மக்கள்: ஓசூர் மலைக் கிராமத்தில் சோகம்

நீண்ட தொலைவில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் டி.பழையூர் மலைக் கிராமப் பெண்கள்.

ஓசூர், கெலமங்கலம் ஒன்றியம் டி.பழையூர் மலைக் கிராமத்தில் குடிநீர் இன்றி கிராம மக்கள் கிணற்றில் ஊறும் சிறிதளவு தண்ணீருக்காக இரவு பகலாகக் காத்திருக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட 5க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் கோடை வெயில் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கிராமங்களில் குடிநீர் விநியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில் தண்ணீர் கிடைக்காமல் குடிநீர் விநியோகம் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்கள், கிணற்றில் அவ்வப்போது ஊறும் சிறிதளவு தண்ணீருக்காக இரவு பகல் என பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பெட்டமுகிலாளம் ஊராட்சியில் உள்ள டி.பழையூர் மலைக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் கூறியதாவது:

''இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஆண்டுதோறும் கோடைகாலத்தில் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகிறோம்.

அதேபோல இந்த ஆண்டும் கடுமையான வெயில் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து இங்குள்ள ஆழ்குழாய்க் கிணற்றில் தண்ணீர் வருவதில்லை. மேலும் ஒகேனக்கல் குடிநீர் வசதியும் இந்த மலைக் கிராமங்களுக்குச் செய்து கொடுக்கப்படவில்லை. இந்த கிராமத்தின் அருகே உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் அவ்வப்போது ஊறும் சிறிதளவு தண்ணீரை ஒரு வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர் என எடுக்க இரவு பகலாக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. கரோனா வைரஸ் விழிப்புணர்வில் கைகளைக் கழுவி சுத்தம் செய்வதற்குக் கூட இங்கு தண்ணீர் இல்லை என்ற நிலையில் வாழ்ந்து வருகிறோம்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே பெட்டமுகிலாளம் ஊராட்சியில் உள்ள டி.பழையூர் மலைக் கிராமத்தில் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x