Published : 17 Apr 2020 05:49 PM
Last Updated : 17 Apr 2020 05:49 PM
மதுரையில் கரோனாவால் தடை செய்யப்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வெளியேறுவதை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு உதவி மையமும் அமைக்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சியில் மகபூப்பாளையம் அன்சாரி நகர், ஆனையூர் எஸ்.வி.பி.நகர், மதிச்சியம், நரிமேடு, குப்புபிள்ளை தோப்பு தெரு, கோமதிபுரம் யாகப்பா நகர், தபால்தந்தி நகர் ஆகிய 7 பகுதிகளில் ‘கரோனா’ பாதிக்கப்பட்ட நோயாளிகள் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அவர்கள் குடும்பத்தினர் மூலம் மற்றவர்களுக்கு பரவலைத் தடுக்கும் வகையில் இப்பகுதிகள் தடை செய்யப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதிகளை சுற்றி 1 கிலோ மீட்டர் அளவிற்கு பொதுமக்கள் வெளியே செல்லாதவாறும், வெளிநபர்கள் உள்ளே வராதவாறும் பாதுகாப்பு தடுப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அவரவர் வீட்டிற்கே கிடைக்கும் வகையில் அந்தந்த பகுதிகளில் செயல்படும் கடைகள் மற்றும் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் கைபேசி எண்ணுடன் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு வீடு வீடாக வழங்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை கண்காணிக்க அப்பகுதிகளில் மாநகராட்சி சார்பில் உதவி மையமும் அமைக்கப்படுகிறது.
மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறுகையில், ‘‘கரோனா பாதித்த தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வெளியில் வருவதை குறைக்கும் வகையில் அவர்களை கண்காணிக்க காமிராக்கள் பொருத்தப்பட உள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் ஏ.டி.எம். இயந்திர வாகனங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒவ்வொரு முறை பணம் எடுத்த பிறகும் கிருமி நாசினி கொண்டு அந்த இயந்திரத்தை மாநகராட்சி பணியாளர் சுத்தம் செய்து கொண்டே இருப்பார், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT