Published : 17 Apr 2020 04:08 PM
Last Updated : 17 Apr 2020 04:08 PM
மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பழமுதிர்சோலை முருகன் சபை சார்பில், கரோனா பாதித்தவர்களுக்கென வழங்கும் உணவு தயாரித்தல் பணியை தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து திருமங்கலம் சென்ற அமைச்சர், 750 தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி ,வேட்டி, சேலை, கிருமிநாசினி, முகக்கவசங்களை வழங்கி அவர்களைப் பாராட்டிய அமைச்சர், அவர்களின் காலைத் தொட்டு வணங்கினார்.
இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி .உதயக்குமார் கூறியது: முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறார்.
மதுரை மாவட்டத்தில் 32 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாநகராட்சி பகுதியில் 15 லட்சம் பேர் உள்ளனர். அனைவருக்கும் கிருமிநாசினி, உணவு, நிவாரண பொருட்கள் மட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படுகின்றன.
முதல்வரின் அறிவுரைப்படி, 22 மாவட்டங்கள் கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றன. சவாலான காலங்களில் முதல்வர் தனது மதிநுட்பத்தால் மக்களை காக்கிறார். 2.1 கோடி குடும்பங்களுக்கு ரூ.3,250 கோடி சிறப்பு நிதி ஒதுக்கி, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 35 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு தொகுப்புகளை வழங்கியுள்ளோம். அம்மா உணவகத்தில் தினமும் 8 ல்ட்சம் பேர் சாப்பிடுகின்றனர்.
சித்திரை திருவிழாவின்போது, பழமுதிர்ச்சோலை முருகன் பக்த சபையினர் 2 லட்சம் பேருக்கு உணவு வழங்குவர். தற்போதைய சூழலிலும் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து உணவு வழங்க உள்ளனர்.
மூன்று முறை முதல்வர், பிரதமருடன் காணொலியில் உரையாடிய போது, தேவையான நிதி கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
சித்திரை திருவிழா நடக்குமா?- அமைச்சர் பதில்:
"தற்போது நடப்பது மனித உயிர் குறித்த சவால். இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் எந்த மத விழாக்களும் நடக்காது என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
அழகர் பெருமான் நமக்கெல்லாம் அருள் புரிந்து நம்மை காப்பாற்றுவார். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை மக்கள் கூடும் அனைத்து மத விழாக்களுக்கும் தடையிருக்கும்போது, எந்த விழாவும் நடைபெறாது.
ஊரடங்கு முடிந்தபின், விழாக்கள் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "திமுக-வின் தீர்மானங்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வெளியிடுகிறதா அல்லது கேளிக்கைக்காக வெளியிடுகிறதா? என மக்களே வியப்படைகின்றனர்.
திமுக தங்களின் அடையாளத்தை இழக்கக்கூடாது என்பதற்காக இது போன்ற அறிக்கையை வெளியிடுகின்றனர். திமுக ஆட்சியில் பேரிடர் நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கினர். கஜா, ஒக்கி புயல் காலத்தில் நிவாரண உதவியாக ரூ.10 லட்சம் வழங்கியது அதிமுக அரசு என, அமைச்சர் ஆர்பி.உதயகுமார்" கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT