Published : 17 Apr 2020 02:52 PM
Last Updated : 17 Apr 2020 02:52 PM
கரோனாவால் இறந்தோரை தொற்று பரவாமல் எரியூட்டுவதற்கு நாகர்கோவில் புளியடி தகனமேடையில் மாநகராட்சியினர் முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். தகனப்பகுதியில் சமூக இடைவெளியுடன் உறவினர்கள் 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரை தகனம் செய்வதற்கு சுகாதாரத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கரோனாவால் இறந்தவர்களின் உடலில் இருந்து வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் பாலித்தீன் கவரால் முழுமையாக மூடப்பட்டு தகனம், மற்றும் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
தொற்று ஏற்படாத வகையில் கவச உடையணிந்த தூய்மை பணியாளர்கள், மற்றும் எரியூட்டும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
கரோனா தொற்றால் இறந்தவரின் உடலைப் போன்று கறுப்பு பாலித்தீன் கவரில் சுற்றிய உடல் போன்ற அமைப்பை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து அவற்றை எரிவாயு தகன மேடையில் வைத்து பாதுகாப்புடன் எரியூட்டம் செய்வது குறித்து மாநகராட்சிப் பணியாளர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.
இந்தத் தகனத்தின்போது தகன மேடையை சுற்றியுள்ள பகுதி, மற்றும் தகனம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கூறுகையில்; மாநகராட்சி தகன மேடையில் கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
உடல் வரும் ஆம்புலன்ஸ் மீது கிருமி நாசினி தெளிப்பதுடன், உடலை கொண்டு வரும் தூய்மை பணியாளர்கள் உடலிலும் கிருமி நாசினி தெளிக்கப்படும்.
மேலும் பாதுகாப்புடன் உடலை எடுத்து எரிவாயு தகனமேடையில் எரியூட்டுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. உடலை எரியூட்டிய பின்பு வெளியே வரும் 5க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் கிருமி நாசினி தெளிக்கப்படும்.
தகன மேடைப்பகுதி அருகே கரோனாவால் இறந்தோரின் உறவினர்கள் 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் சமூக இடைவெளி விட்டு நிற்கும் வகையில் குறியீடுகள் போடப்பட்டுள்ளது. கரோனாவால் இறந்தவரின் உடலில் இருந்து இறந்தவரின் உடலில் இருந்து வைரஸ் வெளியேறாதவாறு பாதுகாப்புடன் தகனமேடையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT