Last Updated : 17 Apr, 2020 02:24 PM

 

Published : 17 Apr 2020 02:24 PM
Last Updated : 17 Apr 2020 02:24 PM

கடலூரில் பட்டினியுடன் கழிப்பறையில் தவித்த நாடோடிக் குடும்பம்: மீட்டு அரசு முகாமில் சேர்த்த  காவல் துணைக் கண்காணிப்பாளர்

கரோனா காலத்தில் சில இடங்களில் காவல் துறையினரின் நடவடிக்கைகள் ஆட்சேபகரமாக இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் அர்ப்பணிப்புடன் கூடிய தங்களது பணிகளால் பெரிதும் பாராட்டப்படுகிறார்கள்.

அந்த வகையில் ஆதரவற்ற நிலையில் தவித்த ஒரு நாடோடிக் குடும்பத்தை மீட்டு அரசு நிவாரண முகாமில் சேர்க்க நடவடிக்கை எடுத்தமைக்காக கடலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சாந்தியைக் கடலூர் மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

ஐபிஎஸ் அதிகாரியான சாந்தி இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்காக பல்வேறு விழிப்புணர்வு பணிகளைச் செய்து வருகிறார். அத்துடன் கரோனா பரவலைத் தடுக்கும் பணியில் இருக்கும் காவலர்களைப் பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுமே தனது கட்டுப்பாட்டில் உள்ள ஒன்பது காவல் நிலையங்களிலும் பணியாற்றும் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினியை வழங்க ஏற்பாடு செய்தார்.

அடுத்ததாக அனைத்துக் காவலர்களின் குடும்பங்களுக்கும் நேரடியாகச் சென்று காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். நரிக்குறவர்கள் உள்ளிட்ட ஆதரவற்றோர் குடும்பங்களுக்கும் தன்னால் ஆன நிவாரண உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார் சாந்தி.

இந்நிலையில், நேற்று இரவு, கடலூர் கம்மியம்பேட்டை குப்பைமேடு அருகே உள்ள கழிப்பறையில் நான்கு பிள்ளைகளோடு கணவனும் மனைவியும் பசியோடு தவித்து வருவதாக சாந்திக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக கடலூரில் உள்ள ‘சிறகுகள்’ தன்னார்வலர் குழுவினரை அழைத்த அவர், இந்தத் தகவலின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்களை உடனடியாக மீட்டுத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க வலியுறுத்தினார்.

இதையடுத்து இன்று அதிகாலை அங்கு சென்ற ‘சிறகுகள்’ குழுவினர் நிரந்தர வசிப்பிடம் இல்லாத அந்தக் குடும்பத்தினர், கிடைக்கும் இடத்தில் தங்கிக் கொண்டு, கிடைத்த வேலையைச் செய்து பிழைத்து வரும் நாடோடிகள் என்பதையும், ஊரடங்கு காரணமாக எந்த வேலையும் கிடைக்காமல் தொடர்ந்து பசியோடு வாடி வருவதையும் தெரிந்து கொண்டனர்.

அதனையடுத்து அவர்களை மீட்டு கடலூர் முனிசிபல் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் ஒப்படைத்தனர். அம்முகாமில் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன. காவல் துணைக் கண்காணிப்பாளர் சாந்தி மற்றும் சிறகுகள் அமைப்பினர் எடுத்த உடனடி முயற்சியால் பசியால் வாடிய அந்தக் குடும்பத்தினர் தற்போது நிம்மதியுடனும் பாதுகாப்புடனும் இருக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x