Published : 17 Apr 2020 01:36 PM
Last Updated : 17 Apr 2020 01:36 PM
பொள்ளாச்சி அருகே நவமலையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினர், வெளிநபர்களால் கரோனா பரவல் ஏற்படுமோ என்று மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குரங்கு அருவி. இங்கு இடதுபுறம் உள்ள வனத் துறை சோதனைச் சாவடியிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் அடர் வனத்திற்குள் இருக்கிறது நவமலை. ஆழியாறு நீர் மின்திட்ட உற்பத்தி நிலையம் இங்கேதான் அமைந்துள்ளது. இதில் அறுபதுக்கும் அதிகமான மின் ஊழியர்கள் இரவு பகலாகப் பணிபுரிந்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள மலைக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் தற்போது 3 வெளிநாட்டவர்களுடன் 15 வெளியூர்வாசிகள் தங்கியிருப்பதாகவும், அவர்களால் தங்களுக்கும் கரோனா பரவும் அபாயம் உள்ளது என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர் மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள்.
இதுகுறித்து, மின் உற்பத்தி நிலைய ஊழியர் ஒருவர் நம்மிடம் பேசினார். “ஆழியாறு பவர் ஹவுஸ் ரொம்பப் பாதுகாப்பான பகுதி. இங்கே உள்ள தொழிலாளர்கள் யாரும் வெளியே போகக் கூடாதுன்னு சொல்லி ரேஷன் பொருட்கள் எல்லாம் இங்கேயே கிடைக்கிற மாதிரி வழி பண்ணி வச்சிருக்கோம். பழங்குடி கிராம மக்களையும் காட்டைவிட்டுப் போக வேண்டாம்னு நிவாரணம் எல்லாம் கொடுத்து வச்சிருக்கோம். எந்த வகையிலயும் கரோனா தொற்று வந்துடக்கூடாதுன்னு கவனமா இருக்கோம்.
இப்போ திருப்பூர் மாவட்டத்துல கரோனா தொற்று கூடுதலா இருக்குன்னு எல்லோருக்கும் தெரியும். இப்படியான சூழல்ல, திருப்பூர்ல இருந்து 10 -15 பேரும், 3 வெளிநாட்டுக்காரங்களும் பக்கத்துல இருக்கிற ரிசார்ட்டுல வந்து தங்கி இருக்காங்க. இவங்களை எப்படி வனத்துறை சோதனைச் சாவடியில விட்டாங்கன்னு தெரியலை. அதைப் பத்தி வனத்துறைகிட்ட கேட்டா, ‘அவங்க பெரிய இடத்துல பேசறாங்க. எந்த மினிஸ்டர்கிட்ட பேசணும். சொல்லுங்கங்கிறாங்க. அவங்ககூட பேசவே பயமாயிருக்கு’னு சொல்றாங்க.
ரிசார்ட்டுல கள வேலை செய்யறதுக்கு, ஹெல்ப்பர் வேலை செய்யறதுக்கு இங்குள்ள பழங்குடி மக்கள்தான் போறாங்க. வெளியாட்கள் தங்கி இருக்கதால அவங்களுக்கு ஒருவேளை கரோனா தொற்று இருந்து, மற்றவர்களுக்கும் பரவிட்டா என்ன ஆகும்?
கரோனா பரவல் அடிப்படையில பொள்ளாச்சி தெற்குப் பகுதி, ‘ரெட் அலர்ட்’ பட்டியல்ல வருது. அதுல இந்த நவமலை, காடாம்பாறை மலைப் பகுதிகள்தான் சுகாதாரமா இருக்கு. இங்கே தொற்று வந்துட்டா ரொம்பக் கஷ்டம். மின்சாரத் துறையில பணிபுரியற 60 பேர்ல ஒருத்தர் படுத்துட்டாலே எல்லாம் முடிஞ்சு போச்சு. தனியார் ரிசார்ட்டா இருந்தாலும், இப்போதைக்கு அதுல குறைஞ்ச நபர்கள்தான் தங்கலாம்னு சொல்லியிருக்காங்க. இங்கே அதுக்கு மேல ஆள் சேர்த்துட்டு, வெளிநாட்டுக் காரங்களையும் கூட வச்சிருக்காங்க. ஊரடங்கு முடியற வரைக்கும் அவங்க இங்கேதான் இருப்பாங்க போல.
துணை மின் நிலைய உயர் அதிகாரியே இந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளிக்கிறதுன்னு தெரியாம முழிக்கிறார். ‘ரிசார்ட் தனியாரோடது. அவங்களை நேரடியா ஒண்ணும் சொல்ல முடியாது. அவங்களுக்குப் பல இடங்கள்ல செல்வாக்கு இருக்கும். நம்மாளுகளைத்தான் அங்கே போக வேண்டாம்னு சொல்ல முடியுது’ங்கிறார்.
அரசு இந்த விஷயத்துல உரிய நடவடிக்கை எடுக்கணும். இல்லைன்னா, நவமலையிலும் சீக்கிரமே கரோனா தொற்று பரவி மின் உற்பத்தி நிலையமே முடங்கும் அபாயம் உருவாகிடும்” என்று பதற்றத்துடன் சொன்னார் அந்த அலுவலர்.
தங்களுடைய பொறுப்பற்ற நடவடிக்கைகள், மற்றவர்களுக்கு எந்த அளவுக்கு இடையூறை ஏற்படுத்துகின்றன என்பது இன்னமும் சிலருக்குப் புரியவில்லை என்பது வேதனைதான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment