Published : 17 Apr 2020 01:05 PM
Last Updated : 17 Apr 2020 01:05 PM
கேரளாவில் 2018-ம் ஆண்டு 17 பேரைப் பலிகொண்ட நிபா வைரஸைத் தொடர்ந்து, உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸும் வௌவால் மூலமே பரவியிருக்கலாம் என்றொரு கருத்து நிலவுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணப்படுகிற சில வௌவால்களில் வௌவால் கரோனா வைரஸ் இருப்பதாக சமீபத்தில் சொன்னது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்). ஆனால், அந்த வௌவால் கரோனாவுக்கும், தற்போது பரவிவருகிற கோவிட் 19 காய்ச்சலுக்கும் சம்பந்தமில்லை என்றும் அந்நிறுவன ஆராய்ச்சி கட்டுரைத் தெளிவுபடுத்தி விட்டது. ஆனாலும் வௌவால்களை சாத்தானைப் போல பழிக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது.
இதுபற்றி 'பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின்' பறவைகள் ஆர்வலர் ஜியோ டாமினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
"உயிரினங்கள் குறித்த சரியான புரிதலின்மையால் பாதிக்கப்படும் ஆந்தைகள், பல்லிகள், பாம்புகள் என்று நீளும் அப்பாவி விலங்குகளின் பட்டியலில் மிகப்பெரும் அவப்பெயரைச் சந்தித்திருக்கும் ஒரு உயிரினம் வௌவாலாகத்தான் இருக்க முடியும். இன்றும் சாலையைக் கடக்கும் பூனைகளும் சுவரில் இருக்கும் பல்லிகளும் தங்கள் வாழ்வின் நல்லது கெட்டதைத் தீர்மானிக்கின்றன என்று நம்பும் ஒரு சமூகத்தில் இவ்வுயிரினங்கள் சந்திக்கும் சிக்கல்கள் சொல்லி மாளாது.
பெரும்பாலும் இரவில் வேட்டையாடுவதும், விநோதமான உருவமும், மனிதனுக்குப் பரிச்சயமில்லாத தன்மையும் வௌவால்களுக்கு இத்தகைய அவப்பெயரைக் கொடுத்திருக்கக்கூடும். இவ்வுலகில் பயனற்ற உயிரினம் என்று எதையும் ஒதுக்கிவிடவோ ஒழித்துவிடவோ முடியாதபடி, மனித வாழ்வு ஒவ்வொரு உயிரினத்துடனும் நுட்பமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இரவாடிகளான வௌவால்கள் அளப்பரிய சூழல் முக்கியத்துவம் கொண்டவை.
வௌவால்களில், உருவத்தில் பெரிய பழம் தின்னும் வௌவால்கள் மற்றும் உருவத்தில் சிறிய பூச்சியுண்ணும் வௌவால்கள் என உணவின் அடிப்படையில் இரு பெரும் பிரிவுகள் உள்ளன.
பூச்சியுண்ணும் வௌவால்கள் இரவு நேரப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகின்றன. ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஓரிடத்தில் நிலைகொண்டிருக்கும் வௌவால்கள் தினமும் எத்தனை ஆயிரம் பூச்சிகளை உண்ணும் என்று எண்ணிப்பார்த்தாலே அவற்றின் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும்.
அடுத்ததாக பழங்களை உண்ணும் வௌவால்கள், 500க்கும் மேற்பட்ட தாவரங்களின் அயல்மகரந்தச் சேர்க்கைக்கும், விதைப்பரவலிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றில் பல தாவரங்கள் வௌவால்கள் நுழைவதற்கென்றே அமைந்தது போன்ற விரிந்த பெரிய மணி வடிவிலான பூக்களைக் கொண்டுள்ளன.
நம் நிலப்பகுதியின் முக்கியப் பயிர்களான வாழை மற்றும் மாம்பழங்களின் மகரந்தச் சேர்க்கைக்குக்கூட வௌவால்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வுலகின் பறக்கும் ஒரே பாலூட்டி உயிரினம் வௌவால்கள்தான்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உயிரினத்தை நோய்ப் பரவலைக் காரணம் காட்டி அழிக்க முற்படுவது முட்டாள்தனமானது. வாழிட அழிப்பு, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, பழத்தோட்ட உரிமையாளர்களால் கொல்லப்படுதல், ஒளிமாசு போன்றவற்றால் ஏற்கெனவே பல வௌவால் இனங்கள் அருகிவரும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கின்றன. பழமுண்ணும் வௌவால்களில் பெரும்பாலானவை வருடத்துக்கு ஒரு குட்டி மட்டுமே ஈனுபவை என்பதால், விரைவில் அற்றுப்போகும் வாய்ப்புள்ளவை.
இயற்கைக்கு மாறான ஒரு உயிரினத்தின் பெருக்கமோ, அழிவோ சூழலில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு நம்முன் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக தவளைகளின் வீழ்ச்சி மிதமிஞ்சிய கொசுக்களின் பெருக்கத்தையும் அவற்றின் மூலம் பரவும் நோய்களையும் கொண்டுவந்துள்ளது போன்று, நரிகளின் அழிவு மயில்களைப் பெருக்கி விவசாயப் பயிர்களுக்கு அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கின்றது. இவ்வரிசையில் இன்று வௌவால்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் அதன் விளைவுகள் எங்கெங்கு என்னவாறு இருக்கும் என்று நாம் கண்டறிவது எளிதானதல்ல. ஆனால், அது நிச்சயம் விரும்பத்தகாத விளைவாகத்தான் இருக்கும் என்று மட்டும் உறுதியாகக் கூறமுடியும்.
எப்படி சிம்பன்சிகளைக் கொல்வது எயிட்ஸ் பரவலைத் தடுக்காதோ அதேபோன்று வௌவால்களைக் கொல்வது எந்த தொற்றுப் பரவலையும் தடுக்கப்போவதில்லை. நாம் செய்யவேண்டியதெல்லாம் காடுகளையும் விலங்குகளையும் ஆக்கிரமித்து அவற்றுடன் கொள்ளும் இயற்கைக்கு மாறான தொடர்பைத் துண்டிப்பதுதான். அதுமட்டுமன்றி காட்டுயிர்களை வேட்டையாடுவதும், கடத்துவதும், உண்பதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்றார் ஜியோ டாமின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT