Published : 17 Apr 2020 12:16 PM
Last Updated : 17 Apr 2020 12:16 PM
கரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பிரசவ வலியால் துடித்த பெண்ணை நள்ளிரவில் ஆட்டோவில் ஓட்டிச் சென்று காப்பாற்றிய புதுச்சேரி காவலருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தில் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி-தமிழக எல்லைப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த காரணத்தினால், பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து முற்றிலுமாக சீல் வைத்தனர்.
இதனால், புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைகளில் யாரும் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தடை செய்யப்பட்டு, மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக முடக்கப்பட்டது. மேலும், காவலர்கள் அப்பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை முடக்கப்பட்ட புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் காவலர் கருணாகரன் (30) என்பவர் கரோனா பாதுகாப்பு சிறப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த இருவர், நள்ளிரவு 12 மணியளவில், தனது மகள் குழந்தை பிறக்கும் தருவாயில் பிரசவ வலியால் துடிப்பதால், அவளை மருத்துவமனை கொண்டு செல்ல உதவுமாறு காவலர் கருணாகரனிடம் கேட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஆள் நடமாட்டம் இல்லாத அந்நேரத்தில் யாராவது அருகில் இருக்கின்றனரா, வாகனம் ஏதாவது இருக்கின்றதா என்று தேடியுள்ளார். பின்னர், அப்பகுதியில் வரிசையாக நான்கு ஆட்டோக்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்ட காவலர் கருணாகரன் அந்த ஆட்டோ உரிமையாளர் உதவியை நாடியுள்ளார்.
"அந்த ஆட்டோ உரிமையாளர் தனக்கு வயதாகிவிட்டதால் என்னால் சரிவர ஆட்டோ ஓட்ட இயலாது. நான் இந்த ஆட்டோக்களை வாடகை விட்டுத்தான் பணம் ஈட்டி வருகிறேன்" எனக் கூறியுள்ளார். உடனே ஆட்டோ உரிமையாளரிடம் சாவியைப் பெற்றுக்கொண்ட காவலர் கருணாகரன் பிரசவ வலியால் துடித்த பெண்ணின் வீட்டுக்கு ஆட்டோவை தாமே ஓட்டிச் சென்று அவரை மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.
அந்தப் பெண்ணுக்கு அன்று இரவே அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. காவலரின் இத்தகைய செயல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து காவலர் கருணாகரனிடம் கேட்டபோது, "நானும், ஊர்க்காவல் படை வீரர் அருள்ஜோதியும் இரவு கரோனா தடுப்பு சிறப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது இருவர் வந்து, மகள் பிரசவ வலியால் துடிக்கிறாள் என்றும், உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டனர். உடனே அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.
சிறிய வயதில் ஒருமுறை ஆட்டோ ஓட்டியிருக்கிறேன். அந்த நம்பிக்கையில் பிரசவ வலியால் துடித்த அந்தப் பெண்ணை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையை நோக்கிப் புறப்பட்டேன். கரோனாவால் வழியின் பல இடங்களில் முற்றிலுமாக தடுப்பு போடப்பட்டதால், அப்பகுதியிலிருந்து வெளியே செல்ல சிரமப்பட்டேன்.
பிறகு பிரதான சாலையை அடைந்து ஆட்டோவை ஓட்டிச்சென்று மருத்துவமனை கொண்டு வந்தபோது வாசலிலேயே குழந்தை வெளியே வரத் தொடங்கியது. பிறகு அவரை உள்ளே மருத்துவர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர். அதன் பின்னர் அங்கிருந்து நான் பணிக்குத் திரும்பி விட்டேன். மறுநாள் முத்தியால்பேட்டை பகுதியில் பணியில் இருந்தபோது, அந்தப் பெண்ணின் தாயார் என்னைத் தேடி வந்து ஆண் குழந்தை பிறந்தது. தாயும், நலமாக இருக்கின்றனர் என்று கூறி என்னிடம் நன்றியைத் தெரிவித்தது மனநிறைவாக இருந்தது" எனத் தெரிவித்தார் காவலர் கருணாகரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT