Last Updated : 17 Apr, 2020 11:52 AM

 

Published : 17 Apr 2020 11:52 AM
Last Updated : 17 Apr 2020 11:52 AM

தூத்துக்குடியில் 9 இடங்களில் 55,000 வீடுகள் கண்காணிப்பு: 7 பேர் விரைவில் வீடு திரும்ப வாய்ப்பு- ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 7 பேர் வேகமாக குணமடைந்து வருகின்றனர். விரைவில் அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பும் வாய்ப்புகள் உள்ளன என மாவட்ட ஆட்சியர் சத்தீப் நந்தூரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு மூதாட்டி இறந்துள்ளார். 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் உள்ள 9 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 55 ஆயிரம் வீடுகள் உள்ளன. இங்கு தினமும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.

மக்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, முதியவர்கள், கர்ப்பிணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. நடமாடும் ஏ.டி.எம். மையமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 4 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. முதல்வர் உத்தரவின்படி அதிக அளவில் மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் சுமார் 200 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதனால் சமூக பரவல் ஏற்படவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.

ஆனாலும் தூத்துக்குடி மாவட்டம் ஹாட்ஸ்பாட்டாக மத்திய அரசு வரையறை செய்து உள்ளது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கான 10 வகையான பொருட்கள் அனைத்தும் நெல்லையில் இருந்து தினமும் வருகிறது. போதுமான அளவு முககவசம் மற்றும் உபகரணங்கள் இருப்பு உள்ளது. ஆனால் சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கும் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் பணிகள் முடிக்கப்பட்டு, அனுமதிக்காக காத்திருக்கிறோம். மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 200 மாதிரிகள் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு ரூ.300 மதிப்பிலான சத்தான உணவு தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் வெளியில் வரும்போது முககவசம் அணிந்துதான் வர வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் 100 சதவீதம் இந்த நோயை விரட்ட முடியும். பொதுமக்கள் மொத்தமாக தேவையான பொருட்களை வாங்கி செல்ல வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் பெரும்பாலும் வழங்கப்பட்டு உள்ளன.

கரோனா வார்டில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் விடுதிகளில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முழுமையாக பணி முடிந்த பிறகு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 7 பேர் வேகமாக குணமடைந்து வருகின்றனர். விரைவில் அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பும் வாய்ப்புகள் உள்ளன. மாவட்டத்தில் 2 ஆயிரத்து 400 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

தற்போது படிப்படியாக குறைந்து 792 பேர் மட்டும் கண்காணிப்பில் உள்ளனர் என்றார் ஆட்சியர் . அப்போது மருத்துவமனை டீன் திருவாசகமணி, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் உடனிருந்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x