Published : 17 Apr 2020 07:06 AM
Last Updated : 17 Apr 2020 07:06 AM
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் 48 மணி நேரத்துக்கு முன்பாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, அனுமதி பெற்றபின் நிவாரணம் வழங்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசியல் கட்சியினர் உட்பட யாரும் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகளை நேரடியாக வழங்கக் கூடாது என்றும் அரசின் மூலமாகவே வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ‘‘திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கடந்த 3 வாரங்களாக ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 4 ஆயிரம் திமுகவினர் சமூகஇடைவெளியுடன் முகக் கவசங்கள், கையுறைகள் அணிந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
ஆனால் தமிழக அரசு தனது அரசியல் சுயலாபத்துக்காக ஏழை,எளிய மக்களின் பசியைப் போக்கிவரும் அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் யாரும் நேரடியாக உணவுப் பொருட்களை வழங்கக் கூடாது என தடை விதித்துள்ளது. எனவே அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என கோரியிருந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னை கிழக்குமாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் ஆகியோரும் தனித் தனியாக வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நேற்று முன்தினம் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.
அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும் அரசு தரப்பி்ல் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு ப்ளீடர் வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
பாரபட்சம் கூடாது
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா என்ற கொடிய தொற்று சமூக தொற்றாக ஒருபோதும் மாறிவிடக் கூடாது. அதற்காக மத்திய, மாநில அரசுகள் மக்களின் நலன் கருதியே பல்வேறு கட்டுப்பாடுகளையும் ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளன. அதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
அதேநேரம் உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் நிவாரணம் தடையின்றி சென்றடைய வேண்டும். தன்னலமற்ற ஈகையும் உதவும் கரங்களின் மனிதாபிமானமும் நிச்சயமாக போற்றப்பட வேண்டும்.எனவே அரசியல் கட்சியினர்,தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக நிவாரண உதவிகளை வழங்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கிறோம்.
நிவாரணங்கள் வழங்க விரும்புவோர் எந்தப் பகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் என நினைக்கிறார்களோ 48 மணிநேரத்துக்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் கொடுக்கவேண்டும். அந்த அதிகாரி முறையாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கோ அல்லது கட்சியினருக்கோ அனுமதியளி்ப்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்.
நிவாரணம் வழங்கும்போது கடைபிடிக்க வேண்டிய நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தனிமனித சமூக இடைவெளியையும் அவசியம்கடைபிடிக்க வேண்டும். வாகன ஓட்டுநர்களை தவிர்த்து 3 நபர்களுக்கு மேல் செல்லக் கூடாது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லக்கூடாது. அதேபோல அரசு அதிகாரிகள் அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT