Published : 16 Apr 2020 11:16 PM
Last Updated : 16 Apr 2020 11:16 PM

நிவாரண- பொருளாதார உதவிக்கு புதிய செயல் திட்டம்; 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்  

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும், நிவாரணம் மற்றும் பொருளாதார உதவிக்கு செயல் திட்டம் உருவாக்க வேண்டும், பட்டினிச் சாவுகளைத் தடுக்க செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என திமுகவின் அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரோனா நிவாரணப் பணியில் மத்திய மாநில அரசுகளின் பங்குகள் குறித்து ஆலோசிக்க திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடந்தது. அதில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஸ்டாலின் தலைமை வகித்த இக்கூட்டத்தில் அதன் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த 11 தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில்10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

''விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஊரடங்கு உத்தரவால் கடும் பாதிப்புக்குள்ளாகி - வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். மத்திய - மாநில அரசுகளின் நிவாரணம் அவர்களின் வருமான இழப்பை எவ்விதத்திலும் தற்காலிகமாக ஈடுகட்டும் விதத்தில் கூட இல்லை.

விளைபொருட்களை விற்க முடியவில்லை. நேரடிக் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளின் நண்பனாக இல்லை. அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி, அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்பதால் தாய்மார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம், சொத்து வரி, வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாதாந்திர கடன் தொகைகள் செலுத்த முடியவில்லை. வாடகைக்குக் குடியிருப்போர் வாடகை செலுத்த இயலவில்லை. பதிவு செய்யப்படாத அமைப்புசாரா தொழிலாளர்கள், வியாபாரிகள் அல்லது பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள் எல்லாம் எந்த உதவியும் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், நலிவடைந்துள்ள சிறு, குறு தொழில்களுக்கும் தேவையான நிவாரண உதவிகள், சிறப்பு மானியங்கள் அளித்திடவும், மாநிலத்தில் தேக்க நிலையை எட்டி விட்ட தொழில் வளர்ச்சியை மீண்டும் முடுக்கி விடவும், தேவையான ஒரு விரிவான நிவாரண- பொருளாதார உதவிக்கான செயல் திட்டத்தை அதிமுக அரசு உடனடியாக வகுக்க வேண்டும் என்று இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

அதோடு, மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் வங்கிகள் ஒத்தி வைத்துள்ள கடன்களுக்கான வட்டியை முழுமையாக ரத்து செய்வது, 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்வு பெற்றதாக அறிவிப்பது, தமிழகத்தில் வாழும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து உணவுகள் வழங்குவது, வெளிநாடுகளிலிருந்தும் - வெளிமாநிலங்களிலிருந்தும் தமிழகம் திரும்ப விரும்புவோர்களுக்கு உரிய ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.

அகதிகளாக தமிழக முகாம்களில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்குவது, விசைத்தறித் தொழிற்சாலைகள் உள்ளிட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து - வேலையின்றி தவித்து வரும் ஏறத்தாழ 50 லட்சம் தொழிலாளர்களுக்கு உரிய நிதி உதவிகளை வழங்கவேண்டும்.

தமிழகத்தில் பட்டினிச்சாவுகள் நிகழாமல் தடுப்பதற்குத் தேவையான திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து அனைத்துத் தரப்பு மக்களையும் காப்பாற்றிட வேண்டும் எனவும், ஊரடங்கு நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் எவ்விதக் காலதாமதமும் இன்றி உடனடியாக விடுவிப்பதோடு - இனிவரும் நாட்களில் வாகனங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை அதிமுக அரசு கைவிட வேண்டும் என்றும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது''.

இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x