Published : 16 Apr 2020 09:43 PM
Last Updated : 16 Apr 2020 09:43 PM
ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை தினமும் 2 மணிநேரம் திறக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள், மதுக்கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
ஊரடங்கு தற்போது மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர எதற்கும் பொதுமக்கள் வெளியில் வருவது தடை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இது மதுப்பிரியர்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்துவதால், கடைகளை குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரமாவது திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், ''திடீரென மது அருந்துவதை நிறுத்தும்போது, இதயத்துடிப்பு அதிகமாகி சுவாப்ச பிரச்சினையை ஏற்படுத்துவதுடன், மூளையைப் பாதிக்கச் செய்கிறது. மேலும் பல இடங்களில் மதுபானக் கடைகள் உடைக்கப்பட்டதாக மாநிலம் முழுவதும் 22 சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. கள்ளச்சந்தையில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் கள்ளச்சாராயம், மெத்தனால் மற்றும் வார்னிஷ்களை குடித்து சிலர் மரணமடைந்துள்ளனர். எனவே, டாஸ்மாக் கடைகளை குறைந்தபட்சம் 2 மணிநேரத்துக்குத் திறக்க உத்தரவிட வேண்டும்'' எனக் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , அசாம் மற்றும் கேரள மாநிலங்களில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதித்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதிக்க முடியாது என வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT