Published : 16 Apr 2020 09:10 PM
Last Updated : 16 Apr 2020 09:10 PM
கிரண்பேடியின் தலையீட்டால் புதுச்சேரி மாநில மக்களுக்கு அரிசி சென்று சேரவில்லை என்று முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஏப் 16) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரியில் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி போட நானும், அமைச்சர் கந்தசாமியும் முடிவு செய்து, அதற்கான கோப்புகளை தயார் செய்து துணைநிலை ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். சிவப்பு அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
அதற்கான கோப்பு தயாரித்து அனுப்பினால், அதில் துணைநிலை ஆளுநர் தலையிட்டு மக்களுக்கு அரிசி கொடுக்கக் கூடாது, பணமாகத்தான் கொடுக்க வேண்டும் என்று காலதாமதம் செய்தார். முதலில் அரிசி போட வேண்டும் என்று கோப்பு வந்தது. பின்னர் அரிசிக்குப் பதிலாக பணம் போட வேண்டும் என்று அந்தக் கோப்பு மாறி வந்தது.
அந்தக் கோப்பு வந்த உடனேயே அமைச்சர் கந்தசாமி தெளிவாக மக்களுக்கு அரிசிதான் போட வேண்டும், அது பிரதமர் அறிவித்த திட்டம். அங்கன்வாடி ஊழியர்கள் அல்லது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும் என்று கூறிக் கோப்பை திருப்பி அனுப்பினார்.
பின்னர் அந்தக் கோப்புக்கு நான் கையெழுத்திட்டு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பினேன். கடந்த 3-ம் தேதி துணைநிலை ஆளுநர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவருடன் காணொலிக் காட்சி மூலம் பேசும்போது, புதுச்சேரி மாநில மக்களுக்கு அரிசி போடக்கூடாது, பணமாகத்தான் போட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அது சம்பந்தமான கோப்பிலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அதனையும் மீறி மத்திய அமைச்சர் ராம்விலாஸ் "நீங்கள் அரிசி எடுத்துக்கொள்ளுங்கள்" என்று எங்களுக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் நாங்கள் அரிசி எடுத்து வந்தோம். அரிசி எப்படிப் போட வேண்டும் என்பதை அமைச்சரும், துறையும்தான் முடிவு செய்ய வேண்டும்.
அதனை முடிவு செய்ய வேண்டியது துணைநிலை ஆளுநர் அல்ல. அரிசியைப் பேருந்து, வேன் மூலம் எடுத்துச் செல்லுங்கள் என்று சொல்ல துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மற்ற மாநிலங்களில் அரிசி போட்டு முடித்துவிட்டனர். ஆனால், புதுச்சேரியில் இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளோம். இதற்கு துணைநிலை ஆளுநர்தான் பொறுப்பு.
நான் பிரதமரிடம் தொலைபேசியில் பேசும்போது புதுச்சேரிக்கு நிதி வழங்க வேண்டும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினேன். குறிப்பாக அரிசிக்குப் பதிலாக, பணமாக வழங்க துணைநிலை ஆளுநர் கூறுவதாகத் தெரிவித்தேன். அதனைக் கேட்ட பிரதமர் அரிசி வழங்குவதை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இது சம்பந்தமாக உள்துறை அமைச்சரிடம் பேசும்படியும் தெரிவித்தார்.
அதன்படி உள்துறை அமைச்சரிடம் பேசினேன். அவரும் அரிசி வழங்கலாம் என்று தெரிவித்தார். ஆனால், புதுச்சேரி மாநில மக்களுக்கு காலத்தோடு அரிசி சென்று சேராமல் இருப்பதற்கு துணைநிலை ஆளுநர்தான் காரணம். அமைச்சர் எடுத்த முடிவை மாற்றுமாறு கூறுவதற்கு துணைநிலை ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. அந்தத் தீர்ப்பை மீறி எவ்வாறு அவர் செயல்படுகிறார்? புதுச்சேரி மாநில மக்களுக்கு அரிசி கிடைக்காமல் பணம் கிடைக்க வேண்டும் என்று கோப்பில் எழுதியவர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிதான். அவர் உண்மைக்குப் புறம்பாகப் பேசி வருகிறார். ஆனால், நான் பொய் கூறுவதாக மக்கள் மத்தியில் வதந்தியைப் பரப்பி வருகிறார்.
மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்க நடவடிக்கை எடுத்துக் கோப்பு அனுப்பியுள்ளோம். அதற்கான முடிவு வந்த பிறகு மறு நடவடிக்கை எடுப்போம்".
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT