Published : 16 Apr 2020 07:11 PM
Last Updated : 16 Apr 2020 07:11 PM
தமிழகத்தில் ‘கரோனா’ வேகமாக பரவும்நிலையில் மதுரை அருகே இறந்த கோயில் ஜல்லிக்கட்டு காளையை நூற்றுக்கணக்கான மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அதற்கு பூஜை செய்து அடக்கம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ‘கரோனா’ வேகமாகப் பரவுவதால் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மக்கள், அத்தியாவசியத் தேவைகளுக்கு தவிர வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
மீறி வருவோர் மீது ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறியாக வழக்குப்பதிவு, வாகனங்கள் பறிமுதல் நடவடிக்கைகளை போலீஸார் எடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் மனிதர்கள் இறந்தாலே அவர்கள் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து 20 பேருக்கு மேல் இறுதி ஊர்வலம், அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்றும், பங்கேற்பவர்கள் சமூக இடைவெளியே பின்பற்றி பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகமே ஊரடங்கு அடங்கிப்போய் உள்ளநிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்தில், கடந்த சில நாளுக்கு முன் இறந்த ஒரு கோயில் ஜல்லிக்கட்டு காளையை அங்குள்ள மக்கள் அதன் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்துள்ளனர்.
இதில், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள், மிக நெருக்கமாக ஒருவரை இடித்துக் கொண்டு நின்று கொண்டு காளைக்கு பூஜை செய்வது, மரியாதை செலுத்துவதுமாக ஊரடங்கு விதிமுறைகளை அப்பட்டமாக மீறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ, கடந்த சில நாளாக ‘வாட்ஸ் அப்’, டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இதுகுறித்து அந்த ஊரை சேர்ந்த கருப்பு கூறுகையில், ‘‘அந்த காளை அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி செல்லாயி அம்மன் கோயிலுக்கு சொந்தமான கிராமத்து ஜல்லிக்கட்டு காளை. 4 வயதுள்ள இந்த காளை கடந்த சில வாரமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது.
சாமி போல் இந்த காளையை எங்க ஊர் மக்கள் வழிபடுவார்கள். அது இறந்த துக்கத்தை எங்களால் தாங்க முடியவில்லை. அதனால், முறைப்படி ஒரு கோயில் காளையை இறந்தால் என்ன செய்வவோ அதன்படி அடக்கம் செய்தோம்.
அதை குளிப்பாட்டி, பூஜை செய்து ஜோடித்து ஒரு இடத்தில் வைத்தோம். ஊர் மக்கள் சாமி கும்பிட்டு ஒவ்வொருவராக வந்து அந்த காளைக்கு மரியாதை செலுத்தினர்.
நாங்கள், ஊரடங்கால் யாரையும் வர வேண்டாம் என்றுதான் சொன்னோம். ஆனால், கிராமம் என்பதால் ஊர் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒருவரை பார்த்து ஒருவர் கூடிவிட்டனர். ஊர்வலமாக எடுத்து சென்று அருகில் உள்ள வெட்டுப்பள்ளம் கண்மாயில்அடக்கம் செய்தோம், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT