Published : 16 Apr 2020 06:37 PM
Last Updated : 16 Apr 2020 06:37 PM
ரமலான் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் பச்சரிசி இந்த ஆண்டும் வழங்கப்படும். ஆனாலும் பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சக்கூடாது என தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்.
ரமலான் நோன்பு வருவதை ஒட்டி நோன்புக் கஞ்சி காய்ச்ச தமிழக அரசு அரிசியை வழங்குவது, ரமலான் நோன்பை எதிர்கொள்வது, தொழுகை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இஸ்லாமியத் தலைவர்கள், தலைமை காஜி உள்ளிட்டோருடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
” 5,450 டன் பச்சரிசியை 2,895 பள்ளி வாசல்களுக்கு வழங்கி வருகிறோம். இதை இந்த ஆண்டு கரோனா தொற்று, ஊரடங்கு உத்தரவினைக் கருத்தில் கொண்டு அரிசியை எப்படி வழங்குவது பள்ளிவாசல்கள் எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து இஸ்லாமியத் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினோம்.
இன்றும் இஸ்லாமிய சமயத் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு ஆலோசனை செய்து அதன்படி சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி நோன்புக் கஞ்சி காய்ச்ச பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் அரிசி 19-ம் தேதிக்குள் நேரடியாக வழங்கப்படும். அதை சிறு, சிறு பைகளாக பிரித்து தன்னார்வலர்கள் மூலம் அந்தக் குடும்பங்கள் இருக்கும் வீடுகளுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதைக் கஞ்சியாக தயாரித்து வழங்கி விடுகிறோமே என இஸ்லாமியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கஞ்சி தயாரித்து வழங்குவது என்பது தினந்தோறும் கஞ்சியைத் தயாரித்து அதைத் தன்னார்வலர்கள் வீடு நோக்கிச் சென்று கொடுப்பது. அப்படிச் செய்தால் பாத்திரங்கள் பயன்பாடு காரணமாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க முடியாது. நோய்த்தொற்று வரக் காரணமாக அமையும். ஆகவே அது கூடாது என முடிவெடுக்கப்பட்டது.
ஆகவே 5,450 டன் பச்சரிசி வழக்கம்போல் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். அதை 22-ம் தேதிக்குள் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் கொண்டு சேர்த்து விடுவார்கள். தனிமைப்படுத்தப்பட்ட, குவாரண்டைன் பகுதிகளில் என்ன வழிவகைகளைப் பின்பற்றி அளிக்கப்படுகிறதோ அதை அப்படியே பின்பற்றி தன்னார்வலர்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் கொண்டு சேர்ப்பார்கள்.
சிறப்புத்தொழுகை பற்றி முடிவெடுக்க வேண்டியது அவர்கள் மதம் சார்ந்த பிரச்சினை. அதை அவர்கள் மதம் சார்ந்த தலைவர்கள் அறிவிப்பார்கள். ஏற்கெனவே வீடுகளில் தொழுகை என முடிவெடுத்து விட்டார்கள். அதனால் பிரச்சினை இல்லை”.
இவ்வாறு தலைமைச் செயலர் சண்முகம் பேட்டி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT