Published : 16 Apr 2020 02:35 PM
Last Updated : 16 Apr 2020 02:35 PM
தொழிலாளர்களுக்கான பிரத்யேக மருத்துவமனையாகச் செயல்பட்டுவரும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டிருப்பதற்குத் தொழிலாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இம்மருத்துவமனையில் தொழிலாளர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
தொழிலாளர்களின் அனுமதியில்லாமல் இந்த மருத்துவமனையைக் கரோனா மையமாக மாற்றியுள்ளதற்கு ஆட்சேபனை தெரிவித்து டெல்லியில் உள்ள இஎஸ்ஐ இயக்குநருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆறுமுகம்.
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை, தொழிலாளர்களுக்கு என்றே பிரத்யேகமாக இயங்கிவரும் பெரிய மருத்துவமனை. தொழிலாளர்கள் அளிக்கும் சந்தா, தொழிலாளர்களுக்காக ஆலை நிர்வாகம் அளிக்கும் நிதி ஆகியவற்றைக் கொண்டு இம்மருத்துவமனை செயல்படுத்தப்படுகிறது. இதில் நிர்வாகப் பணிகளை மட்டுமே மாநில அரசு செய்கிறது. கடந்த சில வருடங்களாக இது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும் செயல்படுகிறது.
ரூ.520 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இதன் கட்டிடத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிகிச்சை பெறுகிறார்கள். இப்போது இந்த மருத்துவமனையைக் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்றியிருக்கிறது தமிழக அரசு.
இது தொழிலாளர்கள் பிரதிநிதிகளைக் கலந்து ஆலோசிக்காமல் எடுத்த முடிவு என தொழிற்சங்கத்தினர் ஏற்கெனவே குமுறிக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள கட்டிடங்கள் கரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டதால், தங்களுக்கு வழக்கமாகக் கிடைத்துவந்த சிகிச்சைகள் தடைபட்டுவிட்டதாகவும், தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்களும் கோபத்தில் இருக்கிறார்கள்.
குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்புள்ளவர்கள், விபத்து, பிரசவம் ஆகியவற்றுக்காகச் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகளை அணுகுமாறு தொழிலாளர்களிடம் இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, தொழிற்சங்கவாதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ஆறுமுகம், டெல்லியில் உள்ள இஎஸ்ஐ பொது இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆறுமுகம், “கோவையின் மையப் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேவையான அளவு படுக்கை வசதிகள், உரிய உபகரணங்கள், மருத்துவர்கள், மருந்துகள் அனைத்தும் இருந்தும், தொழிலாளர்கள் பெரிதும் சார்ந்திருக்கும் இந்த மருத்துவமனையை அரசு கரோனா சிகிச்சைக்காக எடுத்துக்கொண்டது வருத்தமளிக்கிறது.
ஒருவேளை, ‘கோவிட்-19’ நோயாளிகள் அதிகரித்து, அரசு மருத்துவமனையில் போதிய இடம் இல்லை என்ற நிலை வரும்போது, இம்மருத்துவமனையில் தொழிலாளர்களுக்கான சிகிச்சைப் பகுதிகள் தவிர பிற பகுதிகளை அரசு எடுத்துக்கொள்வதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. இந்த விவரங்களையெல்லாம் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
தொழிலாளர்களின் இந்தக் குரல், சம்பந்தப்பட்டவர்களின் செவிகளை எட்ட வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT